நைரோபி: பண்ணை வீட்டில், மத போதகர் வசமாக சிக்கிய நிலையில், இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.. என்ன நடந்தது கென்யாவில்?
கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ளது கென்யா… இங்குள்ளது மாலிண்டி என்ற நகரம்.. இது ஒரு கடற்கரையோர பகுதியாகும்.. இங்கே பால் மெகன்சி என்ற மதபோதகர் வசித்து வருகிறார்..
அதிர்ச்சி: இவரை பற்றின செய்தி சமீபகாலமாகவே வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.. இவருக்கு சொந்தமான பண்ணை இங்கே இருக்கிறது.. அதில் ஏராளமானோர் தங்கி இருக்கிறார்கள்… ஆனால், அவர்கள் பார்ப்பதற்கே உடல்மெலிந்து, எலும்பும் தோலுமாக இருந்தார்கள்.. படுமோசமான நிலையில் காணப்பட்ட நிலையில், திடீரென அதில் 4 பேர் இறந்துவிட்டதாக போலீசுக்கு புகார் வந்தது.
பண்ணையில் அதிரடி: இதையடுத்து போலீசார் பால் மெகன்சி பண்ணையில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.. பண்ணைக்கு சொந்தமான நிலத்தை தோண்டினார்கள்… நிலத்தை சற்று தோண்டும்போதே திடீரென சடலங்கள் அதில் தென்பட்டன..
பிணங்கள்: தோண்ட,தோண்ட ஏராளமான உடல்கள், எலும்புகூடுகளை பார்த்து மொத்த போலீசாலும் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் 21 பிணங்கள் மட்டுமே கிடைத்தது… அதற்கு பிறகு, மேலும் 26 சடலங்கள் கிடைத்தன.. அந்த உடல்கள் எல்லாமே, வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு கிடந்தன. ஆனால், அவர்கள் எல்லாரும் எப்படி இறந்தார்கள் என்ற விசாரணையை போலீசார் கையில் எடுத்தனர்.
அந்த பண்ணையில் இருப்பவர்களிடம் பட்டினியாக இருந்தால், இயேசுவை சந்திக்க முடியும் என்று மதபோதகர் மெகன்சி சொன்னாராம்.. இதைக்கேட்டு, அவர்களும் பட்டினி கிடந்ததாக தெரிகிறது.. நாள்பட்ட பட்டினி காரணமாகவே, அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்றார்கள்.. தொடர்ந்து பண்ணை நிலத்தை தோண்டும் பணியும் தொடர்ந்தது.
சடலங்கள்: மீட்கப்பட்ட சடலங்கள் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.. அந்த ரிப்போர்ட் வந்தால்தான், அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவரும் என்று கணிக்கப்பட்டது.. அத்துடன், அவர்கள் உயிரிழப்புக்கு பட்டினி தான் காரணமா என்பதை உறுதி செய்ய, உடல்களில் இருந்து டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து, நிபுணர்கள் ஆய்வு செய்யவும் துவங்கினர்.
இப்போது விஷயம் என்னவென்றால், சடலங்களை தோண்டியெடுக்கும் பணியில், இதுவரை 403 சடலங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.. இவற்றில் புதிய சடலங்களின் எண்ணிக்கை மட்டும் 12 ஆகும்.
பாதிரியார்: இந்த மெக்கன்ஸி ஒரு டாக்ஸி டிரைவராம்.. பேசியே எல்லாரையும் கவிழ்த்துவிடுவாராம்.. மூளைச்சலவை செய்வதில் கெட்டிக்காரராம்.. பாதிரியார் என்ற வகையில் பால் மெக்கன்சியின் கவர்ச்சிகரமான பேச்சை நம்புவோர் நாளுக்கு நாள் அதிகமாகினர்.. இயேசுவை நேரில் சந்திக்கலாம் என்று சொல்லியே, தன்னை நம்பி வந்த மொத்த பேரையும் பட்டினி போட்டு கொன்றுள்ளார். அத்துடன், இவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க, 16 பேர் அடங்கிய ஆயுதக்குழு ஒன்றையும் பாதுகாப்புக்காக போட்டிருக்கிறார்.
ஆனால், நாட்பட்ட பட்டினியை குழந்தைகளாலும், சிறுவர்களாலும் தாங்கவே முடியவில்லை. அதனால், இந்த பட்டினிக்கு அவர்களில் சிலர் உடன்படாமல் இருந்திருக்கிறார்கள்.. ஆனால் அவர்களை, மனசாட்சியே இல்லாமல், அடித்தும், கழுத்தை நெறித்தும் கொன்றுள்ளார் இந்த மெக்கன்ஸி.. இத்தனைக்கும், 7 குழந்தைகளுக்கு தகப்பனும்கூட.
சடலங்கள்: இப்போதைக்கு 403 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.. ஏற்கனவே, மெக்கன்சி மீது பயங்கரவாதம், சட்டவிரோத பணமாற்றம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ள நிலையில், இனப்படுகொலை என்று தற்போது வழக்கு பதிவு செய்ததுடன், அவரது மனைவி மற்றும் 16 பேரையும் கைது செய்துள்ளனர். மெக்கன்சி இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்..
ஆனால், இவ்வளவு அட்டகாசம் செய்த மெக்கன்ஸியை, போலீஸ் உள்ளே தூக்கி வைத்தாலும், அவரை பின்பற்றுவோர் இன்னும் அடங்கவில்லையாம். இயேசுவை பார்க்கபோவதாக சொல்லி கொண்டிருக்கிறார்களாம்.
கொந்தளிப்பு: அவர்கள் 65 பேர் மீதும் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இத்தனை உயிர்கள் பறிபோன நிலையில், இந்த விஷயத்தில் இப்போதுதான் கென்யா அரசு தலையிட்டுள்ளதாம்.. 400 பேரை கொன்ற நபருக்கு, தூக்கு தண்டனை தர வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கொந்தளித்து சொல்கிறார்கள்..
இயேசுவின் பெயரை சொல்லி இன்னும் எத்தனை பேரை மெக்கன்ஸி காவு வாங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.. விசாரித்து கொண்டிருக்கிறார்கள் போலீசார்??!!