கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க தனி வாரியம்… நிராகரிக்கவும் அதிகாரம்… தமிழக அரசின் அதிரடி அரசாணை!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இதுதொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், “மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு மேற்கொள்வதற்காக வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் அதற்கென தனி வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளை பரிசோதனை செய்து சிசுவைக் கலைப்பதற்கான கருத்துகளை அந்த வாரியம் மூன்று நாள்களுக்குள் வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, போதிய காரணம் இல்லையென்றால், கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்கவும் அந்த வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் ஒரே ஒரு வாரியம் இதற்கென செயல்படுவதால் விண்ணப்பங்களின் மீது உரிய நேரத்தில் முடிவெடுக்க முடியாத நிலை இருப்பது அரசின் கவனத்துக்கு வந்தது என்று அதைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள 32 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனித்தனியே கருக்கலைப்புக்கான அனுமதி வழங்கும் வாரியத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கல்லூரிகளின் முதல்வர் தலைமையில் மகப்பேறு மற்றும் பெண்கள் நலன், பச்சிளம் குழந்தைகள் நலன், கதிரியக்கவியல், குழந்தைகள் இதய நலன், குழந்தைகள் நரம்பியல் நலன் ஆகிய துறைகளின் தலைவர்களும், மனநல ஆலோசகர்களும், மருத்துவக் கண்காணிப்பாளரும், சிசு நல சிகிச்சை இணை பேராசிரியரும் அந்த வாரியத்தில் இடம்பெற்றிருப்பார்கள் என்றும் அவர்கள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து உரிய முடிவை வழங்குவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.