சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் – சூர்யா தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.
சிங்கப்பூரில் வேலை செய்யும் பிரபாகரனுக்கும் சூர்யாவுக்கும் இடையே திருமணமான இரண்டு வருடத்திலேயே, சந்தேகம் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் சூர்யா தேவகோட்டையில் தனியாக வசித்தபடி பிட்னெஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தார்.
சிங்கப்பூரில் வேலை பார்த்த பிரபாகரன், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தவர் சூர்யாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக மகளிர் போலீஸில் மனு அளித்தார். ஆனால், சூர்யா பிரபகாரனுடன் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று முன்தினம் தன்னுடன் வாழ வரும்படி சூர்யாவை பிரபாகரன் அழைத்தும் அவர் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் நேற்று காலை சூர்யா வேலைக்கு செல்ல டூவீலரில் வந்து கொண்டிருந்தபோது தன்னுடைய டூவீலர் மூலம் வேகமாக மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சூர்யாவை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக கழுத்தில் வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சூர்யா இறந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுக்க தேவகோட்டை போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சூர்யாவின் உடலை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே பிரபாகரன் தேவகோட்டை போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் தேவகோட்டை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.