போபால்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி புறப்பட்ட நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பயணம் செய்த விமானம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் மாதம் 23-ந் தேதி பாட்னாவில் கூடி ஆலோனை நடத்தின. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18-ந் தேதிகளில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் நேற்றும் இன்றும் பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ் வெஸ்ட் என்டு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, திமுக தலைவரான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தளம் தலைவரான பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, லாலுபிரசாத் யாதவ், சரத்பவார், உத்தவ் தாக்கரே உள்பட 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணியின் பெயர் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மதியம் 3 மணிக்கு முடிவடைந்தது. 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என்று பெயர் சூட்டுவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அதன்பிறகு பெங்களூரில் இருந்து புறப்பட்டு அவரவர் மாநிலங்களுக்கு சென்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். இவர்கள் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து போபால் போலீஸ் கமிஷனர் கூறுகையில், விமானம் நாளை காலை 9.30 மணியளவில் புறப்பட்டு செல்லும் என்றும் தெரிவித்தார்.
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளியான தகவல் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறுகையில், ” சோனியா காந்தி, ராகுல் பயணம் செய்த விமானம் அவசரமாக தரையிறங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் விமான நிலையத்திற்கு சென்று கொண்டு இருக்கிறோம்” என்றார்.