மாதம் ரூ.2,000 ரொக்கம்… மகளிருக்கு மட்டுமல்ல… ஆண்களுக்கும் லாபம்… கர்நாடகா அமைச்சர் தகவல்!

கர்நாடகா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ள சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 5 முக்கியமான வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதில் குருஹ லக்‌ஷ்மி எனப்படும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம்

இதற்கான முன்பதிவு வரும் 19ஆம் தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை அம்மாநிலத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் லக்‌ஷ்மி ஹெப்பால்கர் மேற்பார்வை செய்து வருகிறார். இவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்கள்

அதில், குடும்பத் தலைவர் யார் என்பதை எப்படி முடிவு செய்தீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு, கர்நாடகாவில் 1.3 கோடி BPL, APL ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இதில் 98 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர். இதனால் குடும்ப தலைமை பொறுப்பில் இருப்பவர்களை அடையாளம் காண்பது மிகவும் எளிதாக இருந்தது.

வங்கி கணக்கு விவரங்கள்

பயனாளர்களும், அவர்களின் கணவர்களும் வருமான வரி செலுத்தும் நபர்களாக இருக்கக் கூடாது. ஆதார் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்றார். ஒட்டுமொத்தமாக 5 திட்டங்களையும் பார்க்கையில், ஆண்களை புறக்கணித்து விட்டு பெண்களுக்கு மட்டும் பயன் தருகிறதோ எனக் கேட்கப்பட்டது.

ஆண்களுக்கு லாபம் தான்

அதற்கு, எங்கள் திட்டங்களில் பாலின வேறுபாடு இல்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ஆண்கள் தான் அதிகம் பயனடைவர். ஏனெனில் அவர்கள் பெண்களுக்கு பேருந்து பயணத்திற்கு பணம் தர வேண்டியதில்லை. மின் கட்டணம் இலவசம். 5 கிலோ அரிசி இலவசம். எனவே ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஆண்களின் பாக்கெட்டிற்கு தான் செல்ல போகிறது என்றார்.

கிசான் சம்மன் யோஜனா

மேலும் கிசான் சம்மன் யோஜனாவின் படி விவசாயிகளுக்கு 4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு கைவிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி கேட்கையில், கிசான் சம்மன் திட்டத்தை நிறுத்துவது பற்றி எந்தவித ஆலோசனையும் செய்யவில்லை. இந்த விஷயத்தில் முதலமைச்சர் உரிய முடிவுகளை எடுப்பார் எனத் தெரிவித்தார்.

லிங்காயத் சமூக மக்கள்

காங்கிரஸ் கட்சியில் லிங்காயத் சமூகத்தின் முகமாக நீங்கள் வளர்ந்து வருவதாக கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு, எனது பொறுப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தேர்தலின் போது லிங்காயத் சமூகத்தினர் அனைவரும் நல்ல ஆதரவு அளித்தனர்.

இதனால் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றோம். இதில் சவாலான விஷயம் என்னவெனில், இம்மக்களின் ஆதரவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு தக்க வைப்பது தான். நான் இருதரப்பிற்கும் இடையில் பாலமாக செயல்படுவேன் என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.