ரசிகர் மன்றம் தொடங்கினார் விஷ்ணு விஷால்
அஜித் தவிர எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ரசிகர் மன்றம் உள்ளது. தற்போது முன்னணி நடிகர்கள் என்றில்லாமல் அடுத்த வரிசையில் இருக்கும் நடிகர்களும் ரசிகர் மன்றம் தொடங்கி வருகிறார்கள். சமீபத்தில் சாந்தனு பாக்யராஜ் ரசிகர் மன்றம் தொடங்கினார். தற்போது விஷ்ணு விஷால் தொடங்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்மீது அன்புகொண்ட தம்பிகள் பலர் எனது திரைப்படங்கள் ரிலீசாகும் நேரத்திலும், எனது பிறந்த நாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்த நாள் முதல் 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்' என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.
அடிப்படையில் நான் விளையாட்டு துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தை தீட்டி வருகிறோம். இதுகுறித்து விரைவில் அறிவிக்க இருக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.