தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள ”நான் முதல்வன்” திட்டம் 12ஆம் வகுப்பு முடித்து விட்டு வெளியே வரும் மாணவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் சிறப்பு குழுவின் மூலம் அளிக்கப்பட்டு வருகின்றன.
11ம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் நடத்திய எம்பி
உயர்கல்வி சேர்க்கை
இந்த திட்டம் சார்ந்த 2023-24ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி கல்லூரி சேர்க்கைக்கு அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அப்படி விண்ணப்பிக்கும் போது பெரும்பாலான கல்லூரிகள், சேர்க்கை தொடர்பான தகவல்களை மின்னஞ்சல், அதாவது இ-மெயில் மூலம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்குகின்றன.
இ-மெயில் முகவரி அவசியம்
எனவே ஒவ்வொரு மாணவருக்கும் இ-மெயில் முகவரி என்பது கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. எனவே தற்போது 12ஆம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களாகவே இ-மெயில் முகவரியை உருவாக்கிட வகுப்பு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்.
எமிஸ் தளத்தில் பதிவேற்றம்
இதை மேற்பார்வை செய்து அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும். இந்த இ-மெயில் முகவரியை EMIS தளத்தில் மாணவர் தகவல் பதிவேட்டில் பதிவேற்ற வேண்டும்.
ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்கள்
இ-மெயில் முகவரியை தொடங்கியதும், அதற்குள் எப்படி நுழைவது, மற்றவர்கள் இ-மெயில் அனுப்புவது, தங்களுக்கு வந்த இ-மெயிலை எப்படி திறந்து பார்ப்பது, எப்படி வெளியேறுவது உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.
இ-மெயில் பாஸ்வேர்டை மாணவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறருடன் பகிரக் கூடாது என வழிகாட்ட வேண்டும்.
புதிதாக தொடங்கப்பட்ட இ-மெயில் மூலம் [email protected] என்ற முகவரிக்கு “நான் புதிய மின்னஞ்சல் முகவரியை பெற்றேன்” என்றும், உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு என்னவாக இருக்கிறது என்றும் இ-மெயில் அனுப்ப வேண்டும்.
மேற்குறிப்பிட்ட செயல்பாட்டை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 17 முதல் ஜூலை 30 வரை Hi-Tech லேப் கணினிகளை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
இதில் மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் குறித்த தகவல்களை கேட்டு உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகளில் உள்ள பயிற்சி பெற்ற ஆசிரியர்களை இணைத்து ஏற்கனவே உருவாக்கப்பட்ட வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்து, அவர்களிடம் இருந்து அறிக்கை பெற்று அனுப்ப வேண்டும். இவ்வாறு நடப்பதை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.