புதுடில்லி: இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு இருப்பதாக, நிடி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது.
ஐ.நா., வளர்ச்சி திட்டமும், ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலையின் வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைப்பும் இணைந்து சர்வதேச வறுமை குறியீடு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இதில், இந்தியாவில் 2005 – 06 மற்றும் 2019 – 21 காலகட்டத்திலான 15 ஆண்டுகளில், 41.50 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இவர்கள் பின்பற்றிய வழிமுறையை பயன்படுத்தி, நம் நாட்டின் தேசிய வறுமை குறியீடு குறித்து ஆய்வு நடத்திய மத்திய அரசின் நிடி ஆயோக் அமைப்பு, அந்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
அதன் விபரம்:
இந்தியாவில், 2015 – 16 முதல் 2019 – 21 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2015 – 16ல் நம் நாட்டில் வறுமையில் வாடியோர் விகிதம், 24.85 சதவீதமாக இருந்தது. இது தற்போது 9.89 சதவீதமாக குறைந்துள்ளது.
நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு மிக வேகமாக நடந்துள்ளது. கிராமப்புறங்களில் 32.59 சதவீதத்தில் இருந்து 19.28 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.65 சதவீதத்தில் இருந்து 5.27 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
தேசிய வறுமை குறியீடு என்பது, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கை தரம் ஆகிய மூன்று சமமான பரிமாணங்களில் பற்றாக்குறையை ஒரே நேரத்தில் அளவிடுகிறது.
இதில், ஊட்டச்சத்து, குழந்தை மற்றும் இள வயது மரணங்கள், மகப்பேறு ஆரோக்கியம், பள்ளி படிப்பின் ஆண்டுகள், பள்ளி வருகை, சமையல் எரிவாயு, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், சொந்த வீடு, சொத்துக்கள், வங்கி கணக்கு உள்ளிட்ட 12 அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
கடந்த 2015 – 16 முதல் 2019 – 21 காலகட்டத்தில் வறுமை ஒழிப்பின் மதிப்பு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. வறுமையின் தீவிரத்தன்மை, 47 சதவீதத்தில் இருந்து 44 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த மாற்றம், திட்டமிடப்பட்ட 2030ம் ஆண்டுக்கு முன்னரே நிகழ்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, உத்தர பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த வறுமை மீட்பு நடவடிக்கை மிக விரைவாக நடந்துள்ளது.
மத்திய அரசின், ஜல் ஜீவன், துாய்மை இந்தியா, மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் இது சாத்தியமாகி உள்ளது. இவ்வாறு இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்