2023ஆம் ஆண்டில் 250 ‘சிசு செரிய’ பஸ் சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘சிசு செரிய பஸ் சேவை’ தொடர்பாக பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதற்கமைய பொலன்னறுவை மாவட்டத்திற்கு 10 சிசு செரிய பஸ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
சிசு செரிய என்பது, அரசாங்கத்தின் பெரும் மானியத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. ஒரு வருடத்திற்கு இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மானியம் அரசாங்கத்திற்கு கிடைக்கின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக முறையாக கொடுப்பனவுகள் வழங்கப்படாமையினால், சிசு செரிய மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
பருவகால சீட்டுக்களுக்கு மேலுமொரு பாரிய நிவாரணம் வழங்கப்படும் போது, பயன்படுத்தப்படும் பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடையும். அதன்படி, அமைச்சரவையின் அனுமதியுடன் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு வறிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பு சலுகைகளின் கீழ் இலவச பருவகால சீட்டுகளை பணம் அறவிடாமல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய முறைமை தொடர்பில் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.