I.N.D.I.A கூட்டணி: “இந்தியாவுக்காக இணைந்திருக்கிறோம்" – எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கார்கே

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தீவிரமாக செயல்படுகின்றன. இதற்காக இன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் 26 கட்சிகள் கலந்துக்கொண்ட எதிர்க்கட்சி கூட்டம் நடந்து. இந்தக் கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எதிர்கட்சிகளின் கூட்டம் – ராகுல் காந்தி

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் விருப்பமில்லை எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, எதிர்கட்சிகளின் கூட்டம் முடிவடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “நாடு முழுவதிலும் உள்ள, 26 எதிர்கட்சிகள் இணைந்து, பா.ஜ.கவுக்கு எதிரான அணியை அமைத்திருக்கிறோம். இந்த அணிக்கு, I.N.D.I.A – Indian National Developmental Inclusive Alliance எனப் பெயரிட்டிருக்கிறோம். இந்த அணியை நிர்வகிக்க, 11 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

டெல்லியில் இந்த அணிக்கான, Secretariat அமைக்கப்படும். மேலும், விரைவில் மகாராஷ்டிராவின் மும்பையில், 3-வது எதிர் கட்சிகளின் கூட்டம் விரைவில் நடத்தப்படும். பா.ஜ.க எதிர்க்கட்சிகளின் அணியை பார்த்து அச்சத்தில் இருக்கிறது. அவர்கள், 38 கட்சிகளுடன் இன்று, டெல்லியில் கூட்டம் நடத்துகின்றனர். எங்கே, 38 கட்சிகள் இருக்கிறது என எனக்குத் தெரியவில்லை, அதில் எத்தனை கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதும் தெரியவில்லை…. அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற அமைப்புகள் எதிர்கட்சிகளுக்கு எதிராக ஏவி விடப்படுகின்றன. அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகளை கடந்து தேசத்துக்காக இணைந்திருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

சோனியா காந்தி – மல்லிகார்ஜுன கார்கே

அதைத் தொடர்ந்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “பா.ஜ.க தலைமையிலான NDA (தேசிய ஜனநாயக கூட்டணி) அணி முழுமையாக விளம்பரத்துக்கானது மட்டுமல்லாமல், முற்றிலும் மோசமான ஆட்சியை நடத்துகிறது. ஆனால், நாங்கள் அமைத்துள்ள I.N.D.I.A அணி மக்களுக்கான, விவசாயிகளுக்கான, இளைஞர்களின் எதிர்காலத்துக்கான அணியாக இருக்கும்.

பா.ஜ.க ஆட்சியால் மக்கள் நிம்மதியை இழந்திருக்கின்றன. எங்கள் அணி பா.ஜ.க-வின் பிடியிலிருந்து இந்தியாவை மீட்கும், மக்களை காக்கும். NDA அணியே உங்களால் I.N.D.I.A-வை எதிர்க்க முடியுமா? உங்களுக்கு எதிராக செயல்பட்டால், உடனடியாக அமலாக்கத்துறை, CBI-யை ஏவிவிட்டு மிரட்டுவதை மட்டுமே உங்களால் செய்ய முடியும். 2024 தேர்தலில் நாங்கள் இணைந்து செயல்பட்டு நிச்சயம் வெற்றிப்பெறுவோம். இனம், மொழி, மதம் கடந்து ஒன்றாக இணைந்திருக்கிறோம். தேசத்தை அழிவிலிருந்து காக்க வேண்டும்” எனக் காட்டமாக தெரிவித்தார்.

எதிர்கட்சிகளின் கூட்டம் – ராகுல் காந்தி

அதைத் தொடர்ந்து பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், “பா.ஜ.க-வின் இந்த 9 ஆண்டுகால ஆட்சியில் ரயிலில் ஏறுவதற்குக் கூட பயமாக இருக்கிறது. விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என அனைவரும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். அரசுத் துறைகள் அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டிருக்கிறது. எனவே, நாட்டை மக்களுக்கானதாக மாற்றுவதற்கு மோடி அரசை வீழ்த்த வேண்டும். I.N.D.I.A கூட்டணியில் இன்னும் கட்சிகள் விரைவில் இணைவார்கள் ” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “I.N.D.I.A என்ற அணியின் நோக்கமே இந்தியா தான். பா.ஜ.க-வுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இணைந்திருக்கிறோம். இப்போது நடக்கும் இந்த சண்டை பா.ஜ.கவுக்கு எதிரானது என்பதைத் தாண்டி, அதன் கருத்தியலுக்கு எதிரான அணியாக திரண்டிருக்கிறோம்.

எதிர்கட்சிகளின் கூட்டம்

இது இந்தியாவின் அரசியல் சாசனத்தைக் காப்பதும், இந்தியாவின் மக்கள், தொழில்வளம், இளைஞர்கள் என அனைத்தையும் காப்பதும், இந்தியாவின் யோசனையை காப்பதும்தான் எங்கள் முக்கிய நோக்கம். பா.ஜ.கவுக்கு எதிராக, அவர்களின் மோசமான ஆட்சியால் ஏற்பட்ட விளைவுகளுக்கு எதிராக போராடி மக்களை காப்பது தான் இந்த அணியின் அடிப்படை நோக்கமாக இருக்கும். I.N.D.I.A அணி நிச்சயம் பா.ஜ.க-வின் ஆட்சியை அகற்றும்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.