சென்னை: Vishnu Vishal Birthday (விஷ்ணு விஷால் பிறந்தநாள்) விஷ்ணு விஷால் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் படத்தில் அவரது கேரக்டர் பெயர் மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களுக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா குறித்த பணிகளில் ஆர்வமாக கவனம் செலுத்திவருகிறார்.
இயக்குநராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.
லால் சலாம் இயக்கும் ஐஸ்வர்யா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக லால் சலாம் என்ற படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஷுட்டிங் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்தது. லால் சலாம் படத்தின் ஹைலைட்டாக ரஜினிகாந்த் இருக்கிறார்.
மொய்தீன் பாய்ரஜினிகாந்த்: லால் சலாமில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிக்கிறார். மும்பையில் அவர் தாதாவாக இருப்பார் என்றும் விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் ஒரு பிரச்னையில் இருந்து அவர் காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் கபில்தேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.
முடிந்தது ஷூட்டிங்: இந்தச் சூழலில் படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவந்தது. கடைசியாக புதுச்சேரியில் நடந்த ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவைடைந்தது. படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. நிச்சயம் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது. அதேபோல் ரஜினியின் ஸ்க்ரீன் பிரஸென்ஸும் அட்டகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு விஷால் பிறந்தநாள்: இந்நிலையில் விஷ்ணு விஷால் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி லால் சலாம் படக்குழு விஷ்ணு விஷாலில் போஸ்டரையும், அவரது கேரக்டர் பெயரையும் வெளியிட்டிருக்கிறது. படத்தில் அவர் திருநாவுக்கரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முன்னதாக அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு நற்பணி மன்றத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் விஷ்ணு விஷால் நற்பணி மன்றம் என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்” என தெரிவித்திருந்தார்.