ஆமதாபாத், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ., எனப்படும் ‘இன்டர் சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ்’ எனப்படும் உளவு அமைப்புக்கு நம் ராணுவ தளங்கள் குறித்த ரகசியங்களை வெளியிட்ட மூன்று பேருக்கு குஜராத் நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ஆமதாபாத் அருகில் உள்ள ஜமால்பூர் நகரைச் சேர்ந்த சிராஜுதீன் அலி, 37, முஹமது அயூப், 36, மற்றும் ஜோத்பூரைச் சேர்ந்த நவுஷத் அலி, 36, ஆகியோரை ஆமதாபாத் நகர கிரைம் போலீசார் கடந்த 2012ல் கைது செய்தனர்.
இறையாண்மைக்கு கேடு
இவர்கள் அனைவரும், ஆமதாபாத், காந்தி நகர், ஜோத்பூர் பகுதிகளில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகம் குறித்த தகவல்களை நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
விசாரணையில், இவர்கள், நம் ராணுவ ரகசியங்களை ‘இ – மெயில்’ வாயிலாக பாக்.,கின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கிரிமினல் சதி மற்றும் நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் விசாரணை ஆமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கூடுதல் அமர்வு நீதிபதி அம்பாலால் படேல் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். இதில் அவர் உத்தரவிட்டதாவது:
இந்திய குடிமக்களாக இருந்தும், பாகிஸ்தானின் நன்மையைப் பற்றி மட்டுமே மூவரும் சிந்தித்துள்ளனர். இவர்கள் அனைவரும் நம் நாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
ஆனால் தேசபக்தியின்றி பாக்., மீது அன்பும், பாசமும் வைத்துள்ளனர். மூன்று ஆண்டுகளாக இந்திய ராணுவம் தொடர்பான ரகசியங்களை அங்கு அனுப்பி வைத்துஉள்ளனர்.
இதற்கு லட்சக்கணக்கில் பணமும் பெற்றுள்ளனர். இவர்களின் செயல் இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு கேடு விளைவித்துள்ளது.
தேச விரோத செயல்
இந்த செயலால், ஒட்டுமொத்த தேசமே பலிகாடா ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தங்கியிருந்து தேச விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு குறைவான தண்டனை வழங்குவதும் தேச விரோத செயலாகும்.
ஆகவே, மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ், 14 ஆண்டுகளும், நாட்டிற்கு எதிரான போர் குறித்த தகவலை மறைத்தல் பிரிவின் கீழ் 10 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
இவை அனைத்தையும் அவர்கள் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்