சென்னை: நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் ரிலீசான படம் போர்த்தொழில்.
சைக்கோ த்ரில்லராக உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நல்ல விமர்சனங்களையும் சிறப்பான வசூலையும் பெற்றது.
பெரிய அளவிலான ஆக்ஷன், பாடல்கள் என செலவு செய்யாமல் கதையை மட்டுமே நம்பி இந்தப்படத்தை அணுகியுள்ளார் இயக்குநர்.
ஓடிடியில் வெளியாகும் போர்த்தொழில் படம்: கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளிவரும் படங்களுக்கு மக்களின் ஆதரவு எப்போதுமே காணப்படும். அது லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும், அதிகமான பிரமோஷன்கள், பஞ்ச் டயலாக்குகள், பிரம்மாண்டமான செட்களில் எடுக்கப்படும் பாடல்கள் என இவை எவையும் இல்லாமல் இருந்தாலும் கதையில் நேர்த்தி காணப்பட்டால், அந்தப் படம் கண்டிப்பாக ஹிட்தான். இதற்கு சமீபத்திய உதாரணம் போர்த்தொழில் படம் மற்றும் அதன் சிறப்பான வெற்றி.
நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான படம் போர்த்தொழில். சைக்கோ த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அதிகமான ஆதரவை காட்டியுள்ளனர். படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. இந்தப் படம் 10 நாட்களிலேயே 23.10 கோடி ரூபாய் வசூலை எட்டியது. இந்தப் படத்தின் வெற்றியை கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்களும் படத்தை பாராட்டித் தள்ளினர். இந்தப் படத்திற்கு அதிகமான பிரமோஷன்கள் எதுவும் செய்யப்படாத நிலையில், படம் மற்றவர்களின் பாராட்டிலேயே அதிகமான ரசிகர்களை திரையரங்குகளுக்கு கவர்ந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்தும் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
வரும் 28ம் தேதி பல மொழிகளில் இந்தப் படம் சோனி லைவ் தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற போர்த்தொழில் படம், ஓடிடியிலும் அதிகமான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் அதிகாரியாக நடிப்பது என்றால் சரத்குமாருக்கு அல்வா சாப்பிடுவது போல என்ற நிலையில், இந்தப் படத்தில் மிடுக்கான போலீஸ் உயரதிகாரியாக அவர் சிறப்பாக நடித்துள்ளார்.
ராட்சசன் படத்திற்கு பிறகு, ரசிகர்களை அதிகமாக கவர்ந்த சைக்கோ த்ரில்லர் படமாக போர்த்தொழில் காணப்படுகிறது. இந்தப் படத்தின் க்ளைமாக்சில், அடுத்த வழக்கை ஆராய அசோக்செல்வன் மற்றும் சரத்குமார் செல்வதாக காட்டப்படும் நிலையில், படத்தின் அடுத்த பாகமும் உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீரியசான போலீஸ் அதிகாரி மற்றும் கத்துக்குட்டி போலீஸ் காம்பினேஷன் படத்திற்கு சிறப்பான பலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.