தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்து வரும் திட்டங்களில் ஒன்று சிறார் திரைப்படங்களை திரையிடுதல். இதன்மூலம் மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ள முடியும். பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறியலாம். தன்னம்பிக்கை, நட்பு, குழு உணர்வு, பாலின சமத்துவம் உள்ளிட்ட பண்பு நலன்களை பெறலாம். உள்ளார்ந்த படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர முடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நம்புகிறது.
அதிரடி ஆய்வு நடத்திய அன்பில்
பள்ளிக்கல்வித் துறை திட்டம்
இவரது வழிகாட்டுதலின் கீழ் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையின் கீழ் பள்ளிக்கல்வித் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் 2வது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
சிறார் திரைப்படங்கள் திரையிடல்
இதேபோல் நடப்பு 2023-24 கல்வியாண்டிலும் தொடர பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சில வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு மாதமும் திரையிடப்படவுள்ள திரைப்படம் குறித்த தகவல் மாதத்தின் முதல் வாரத்தில் எமிஸ் இணையதளம் வாயிலாக தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும். நடப்பு ஜூலை 2023ல் E.T The Extra Terrestrial என்ற ஆங்கிலப் படம் திரையிட வேண்டும்.
முன்னேற்பாடுகள்
இதற்காக ஒதுக்கப்பட்ட பாட வேளையில் திரையிட வேண்டும். இதையொட்டி ஒரு பொறுப்பாசிரியர் நியமிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் குழுக்களாக பிரித்து திரைப்படங்களை பார்க்க வைக்கலாம். திரையிடல் நிகழ்வுகள் போதிய காற்றோட்டத்துடன் கூடிய இடம் தேவை. ஒலிப்பெருக்கி சாதனங்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். மின் சாதனங்கள் அதிகம் வெப்பமடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமிஸ் மூலம் பதிவு
எமிஸ் தளம் வழியாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் லாகின் மூலம் திரைப்படத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். பென் டிரைவ் அல்லது டிவிடியில் சேமித்து ஹை-டெக் லேப் வாயிலாக திரையிட வேண்டும். இந்த வசதி இல்லாத பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களின் பங்கு
திரைப்படம் ஒளிபரப்பப்படுவதற்கு முந்தைய நாள் அதுதொடர்பான சுவரொட்டியை பள்ளி வளாகத்தில் ஒட்ட வேண்டும். இந்த திரைப்படம் சார்ந்து சிறு முன் உரையாடல் நிகழ வேண்டும். மாணவர்கள் கவனம் சிதறக் கூடாது. திரையிடல் முடிந்த பின்பு மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்கலாம். 5 மாணவர்கள் திரைப்படம் குறித்து 2 அல்லது 3 நிமிடங்கள் பேச வேண்டும்.
வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா
படம் தொடர்பான மாணவர்களை படைப்புகளை ஆவணப்படுத்துவது அவசியம். இவற்றை சிறார் இதழில் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அளவில் நடக்கும் சிறார் திரைப்பட விழாவில் பங்கேற்கும் மாணவர்களில் சிறப்பாக செயல்படும் 25 பேரை தேர்வு செய்து வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.