ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை: நிறுவனங்கள் சார்பில் வாதம்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடந்த வாதம்:- ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகவாச்சாரி, மணிசங்கர்,சதீஷ் பராசரன்: தமிழக அரசுதற்போது கொண்டு வந்துள்ள சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் அனைத்தையும் மத்தியஅரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தமிழக அரசு சட்டம் இயற்ற முடியாது. ஏராளமான கட்டுப்பாடுகளுடன் திறமை அடிப்படையிலேயே ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட அனுமதிஅளிக்கப்படுகின்றன.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது தென் மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக கூறுவதற்கு எந்த புள்ளிவிவரமும் இல்லை. அரசுக்கு நீதிபதி சந்துரு அறிக்கை அளிப்பதற்கு முன்பாக, இதுதொடர்பாகஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களிடம் எந்த கருத்துகளும் கோரவில்லை. அவரது அறிக்கை பொது வெளியில் வெளியிடப்படவில்லை. அவர் இரண்டே வாரங்களில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். முறையாக விசாரணை நடத்தாததும் பாரபட்சமானது. உயர் நீதிமன்ற தீர்ப்புகளை செல்லாததாக்கும் வகையில் தமிழகஅரசு சட்டம் இயற்றியுள்ளது.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல்.சுந்தரேசன்: ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் சட்டப்படி ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும். இவ்வாறு வாதம் நடந்தது.

தமிழக அரசு தரப்பின் வாதத்துக்காக வழக்கை நீதிபதிகள் ஆக.1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.