கள்ளக்குறிச்சிக்கு வந்த உதயநிதியின் காரை நோக்கி குழந்தையுடன் ஓடிய தம்பதியால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் குழந்தைகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை தம்பதி முற்றுகையிட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் என்ற கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன். இவருடைய மனைவி லட்சுமி. இவர்கள் இரு குழந்தைகளுடன் வீடு இல்லாத நிலையில் வசித்து வருகிறார்கள்.

தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி மனு அளித்துள்ளனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி வருவாய் துறையினர் இந்த தம்பதிக்கு வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளனர். வீட்டு மனை பட்டா பெற்ற இவர்கள் எங்களுக்கான வீட்டுமனை எங்கே இருக்கிறது? அதை காட்டுங்கள் என வருவாய்த் துறையை மீண்டும் நாடியுள்ளனர்.

இந்த நிலையில் வருவாய் துறையில் உலகங்காத்தான் கிராமத்திற்கு சென்று வெங்கடேசன் லட்சுமி தம்பதிக்கு நேற்று முன் தினம் அரசு இடத்தில் நிலம் ஒதுக்கி ஒரு கல் நடப்பட்டது. ஆனால் இதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஏற்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து அவர்கள் அரசு அதிகாரிகளால் நடப்பட்ட கல்லை பிடுங்கி எறிந்ததாக தெரிகிறது.

இதையடுத்து அந்த தம்பதி அந்த இடத்திற்கு வரவிடாதபடி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வெங்கடேசன், லட்சுமி தம்பதியினர் வேதனை அடைந்தனர். இந்த நிலையில்தான் உலகங்காத்தான் கிராமத்திற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார்.

அவர் அங்கு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை உதவினார். அப்போது அங்கு குழந்தைகளுடன் வந்த வெங்கடேசன் – லட்சுமி தங்களுக்கு வீட்டு மனை பட்டாவை அரசு அதிகாரிகள் கொடுத்ததையும் அங்கு வசிக்க விடாமல் அக்கம்பக்கத்தினர் மிரட்டல் விடுத்ததாகவும் கண்ணீருடன் கூற வந்தனர். அப்போது அங்கிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், அவர்களிடம் தான் இடம் ஒதுக்கி வீடு கட்டித் தருவதாக தெரிவித்தார்.

ஆனால் அதை கேட்காமல் அமைச்சர் உதயநிதியிடம் சொல்வதற்காக சப்தம் இட்டுக் கொண்டே இருந்தனர். இந்த நிலையில் ஷ்ரவன்குமார், வெங்கடேசனின் தோளில் தட்டிக் கொடுத்து தங்களுக்கு வேண்டியதை தான் செய்து கொடுப்பதாகவும் பொறுமையாக இருக்குமாறும் தெரிவித்தார். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பபு ஏற்பட்டது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.