இம்பால்: மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மே மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாகமத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அம்மாநில முதல்வரிடம் பேசி விசாரிக்க கூறிய நிலையில் இது ரொம்ப லேட் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலமான மணப்பூரில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். குக்கி எனும் இனத்தை சேர்ந்த மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். இந்நிலையில் தான் மைத்தேயி பிரிவு மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க கோரினர்.
இதற்கு குக்கி இனக்குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி மணிப்பூரில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இரண்டரை மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இதில் 130க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மத்திய இணையமைச்சர், மாநில அமைச்சர் உள்பட அரசியல்கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு வன்முறையை கட்டுப்படுத்த முயன்றார். இதுவும் கைக்கொடுக்கவில்லை. தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் மணிப்பூரில் ராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மணிப்பூர் மாநிலம் பைனோம் கிராமத்தில் உள்ள வீடுகளை எரித்தத கும்பல் அதிலிருந்து தப்பியோடிய 2 ஆண்கள், 3 பெண்கள் என ஐந்து பேரை தாக்கி உள்ளனர். இதில் ஒரு ஆண் இறந்த நிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். மேலும் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல், இன்னொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ நேற்று இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நெட்டிசன்கள் மணிப்பூர் மாநில பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்த புகாரில் போலீசார் கொலை மற்றும் பலாத்கார வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மேலும் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றவர்கள் மைத்தேயி பிரிவினர் எனவும் கூறப்படுகிறது. அதோடு அவர்கள் கொன்ற ஒருவர், நிர்வாணப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவரின் சகோதரர் ஆவார். அதோடு இந்த சம்பவம் மே மாதம் 4ம் தேதி அதாவது வன்முறை தொடங்கிய மறுநாள் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த பிரச்சனை தற்போது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
இந்நிலையில் தான் இந்த விவகாரம் குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் , ‛‛மணிப்பூரில் 2 பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ கண்டிக்கத்தக்கது. இது மனிதாபிமானமற்ற செயல். இதுபற்றி மணிப்பூர் முதல்வர் பீரன் சிங்கிடம் பேசினேன். தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான முயற்சி ஒருபோதும் கைவிடப்படாது எனவும் தெரிவித்துள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.