புகைபிடித்தல், மது அருந்துதல் காட்சிகளை தவிர்ப்பது நல்லது : சந்தானம்

கோவை : திரைப்படங்களில் இயக்குனர்கள் முடிந்தவரை புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை தவிர்த்தல் நல்லது என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி, வருகிற 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கும் ‛டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர இருப்பதாகவும் இது ஒரு வித்தியாசமான பேய் படம் என்றும் தெரிவித்தார். மேலும் இது திகில் கலந்த நகைச்சுவை படம் என்பதால் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் என்றும் இந்த படம் வெற்றி பெற்றால் இதன் தொடர்ச்சி வெளியாகும் என்றும், அடுத்ததாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற படம் வெளிவர இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது கதாநாயகனாக நடித்து வருவதாகவும் நகைச்சுவை நடிகரா, கதாநாயகனா என என்னிடம் கேட்டால் இட்லி வேண்டுமா தோசை வேண்டுமா என்பது போல இருப்பதாகவும் நகைச்சுவையுடன் கூறிய சந்தானம், நகைச்சுவை நடிகராக இருந்தபோது எவ்வித கவலையும் இல்லாமல் இருந்ததாகவும் தற்போது கதாநாயகனாக நடிப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன் எனவும் மீண்டும் நல்ல கதை வந்தால் நகைச்சுவை கேரக்டரில் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பேன் எனவும் கூறினார்.

இதே போல் சொந்த படம் எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் இதுவரை யாரும் நடித்திராத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை எனவும் கூறியதுடன் திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்ப்பது சிறப்பு என்றும் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து காலையில் மது அருந்துவோர் குறித்த அமைச்சர் முத்துசாமியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சந்தானம், தான் டிடி ரிட்டன்ஸ் குறித்து பேச வந்ததாகவும் இது தொடர்பாக நான் பதில் அளித்தால் காலையிலேயே நான் சரக்கு போட்டு வந்ததாக மக்கள் நினைப்பார்கள் எனவும் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.