பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற கொடூர வீடியோ; மணிப்பூரில் என்ன நடக்கிறது…?- முழு விவரம்

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மூன்று முக்கிய இனக்குழுக்களான நாகா, குகி மற்றும் மைதேயி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் நாகா மற்றும் குகி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மைதேயி இன மக்கள்

மணிப்பூரில் நாகா மற்றும் குகி இன பழங்குடி மக்கள் 40 சதவீதத்திற்கு மேல் வசித்து வருகின்றனர். பழங்குடி அல்லாத மைதேயி இன மக்கள் இம்பாலைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் பெருமளவில் வசித்து வருகின்றனர். ஆனால் பழங்குடி மக்களான நாகா மற்றும் குகி இன மக்கள் மலைக்கிராமங்களைச் சுற்றி வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் ஐகோர்ட்டு, மைதேயி மக்களை பழங்குடி இன பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொண்டது.

இதனால் மைதேயி மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநிலம் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3-ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பேரணியில்தான் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று மைதேயி இன மக்களின் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல் படிப்படியாக வன்முறையாக மாறியது.

மணிப்பூர் வன்முறை

மாநிலத்தின் விரிவாக்க பணிகளுக்கு மலைக்கிராமங்களில் இருந்து குகி இன மக்களை அரசு வெளியேற்ற முற்பட்டதும் தொடர் போராட்டத்திற்கான ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இரண்டு குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறை கொஞ்சம் கொஞ்சமாக மாநிலம் முழுவதும் பரவி தற்போது மணிப்பூரே எரிந்து கொண்டிருக்கிறது.

கடந்த மே மாதம் 3-ம் தேதி கலவரம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் வன்முறை தொடர்பாக போலி வீடியோக்கள் பரவுவதால் இணைய சேவை முடக்கப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கலவரத்தின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் கலவரக்காரர்களை கண்டதும் சுட மாநில கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

200 பேர் உயிரிழப்பு

மணிப்பூர் வன்முறையில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அம்மாநில முதல் மந்திரி, முக்கிய மந்திரிகள் மற்றும் பல்வேறு சமூகத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் மணிப்பூரில் கவர்னர் தலைமையில் அமைதிக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தக் குழுவில் மணிப்பூர் மாநில முதல் மந்திரி, மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இடம்பெற்று இருந்தனர்.

கொடூர வீடியோ

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

இதனைத் தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்து உள்ளது. இந்த வீடியோவை கண்ட மனித உரிமை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மூன்று பெண்கள்

வீடியோவில் காணப்பட்ட ஒரு பெண்ணின் வயது சுமார் 20 இருக்கும் என்றும், மற்றொரு பெண்ணின் வயது 40 இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த வீடியோவில் இரண்டு பெண்கள் மட்டுமே காணப்படுவதாகவும், ஆனால் அந்த கும்பல் 50 வயது பெண் ஒருவரையும் ஆடையை களைய வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் ஒரு இளம் பெண்ணும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீஸ் எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

மே 3-ம் தேதி நவீன ஆயுதங்களுடன் தவுபால் மாவட்டத்தில் அமைந்துள்ள தங்கள் கிராமத்தில் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கும்பல் கொள்ளையடித்ததுடன் கிராமத்திற்கு தீ வைக்க ஆரம்பித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் தப்ப முடியாது

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை குறித்து பேட்டி அளித்த பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம். மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது, எனது இதயம் கனத்துள்ளது. இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே அவமானம் என்றும், குற்றறவாளிகள் தப்ப முடியாது என்றும் கூறி உள்ளார்.

மரண தண்டனை

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனிடையே, இந்த வீடியோவை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கும், சமூக ஊடகங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் முதல் மந்திரி பைரன் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நேற்றைய தினம் வெளிவந்த துயரமான வீடியோவில் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீடியோ வெளியான உடனேயே, மணிப்பூர் காவல்துறை நடவடிக்கையில் இறங்கி இன்று காலை ஒருவரை கைது செய்துள்ளது. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம். நம் சமூகத்தில் இது போன்ற கேவலமான செயல்களுக்கு இடமே இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.