பெண் இயக்குனர்கள் குறித்து வருத்தப்படும் ஹனி ரோஸ்
ஜீவா நடித்த சிங்கம்புலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஹனி ரோஸ். தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்த ஹனி ரோஸ் கடந்த வருடம் தமிழில் சுந்தர்.சியுடன் பட்டாம்பூச்சி படத்திலும் இந்த வருடம் தெலுங்கில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுடனும் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள ‛ரேச்சல்' என்கிற படத்தில் நடித்துள்ளார் ஹனி ரோஸ். இந்த படத்தை பெண் இயக்குனரான ஆனந்தினி பாலா என்பவர் இயக்கியுள்ளார்.
ஹனி ரோஸ் மாட்டு இறைச்சி வெட்டுவதற்காக கையில் கத்தியுடன் அமர்ந்திருப்பது போன்று சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஹனிரோஸ் கூறும்போது, “இந்த படத்தில் மிகவும் ஒரு போல்டான கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்துள்ளேன் என்று சொல்லலாம். அது மட்டுமல்ல இந்த படத்தில் முதல் முறையாக ஒரு பெண் இயக்குனருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். அவருக்கும் இது முதல் படம் தான்.
இதற்கு முன்பு இரண்டு பெண் இயக்குனர்கள் என்னிடம் அருமையான கதைகளை கூறினார்கள். ஆனால் சில காரணங்களால் அந்த படங்களை அவர்களால் முன்னெடுத்து செல்ல முடியவில்லை. திரையுலகில் பெண் இயக்குனர்கள் வாய்ப்பு பெறுவதும் கிடைத்த வாய்ப்பை தக்க வைப்பதும் மிகப் பெரிய போராட்டமாகத்தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.