மகாராஷ்டிராவில் கனமழை; நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 100 பேர் – 4 பேர் உயிரிழப்பு, 22 பேர் மீட்பு!

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட, மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையில் பெய்த கனமழையால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராய்கட் மாவட்டத்தில் உள்ள காலாப்பூர் அருகில் இருக்கும் இரசல்வாடி என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்த பகுதியில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் 30 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் தாசில்தார் நேரில் சென்றுள்ளனர். மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இது வரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்துவிட்டனர். 21 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இரு குழுவினர் மும்பையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இது தவிர உள்ளூர் மக்கள், தொண்டு நிறுவனத்தினர், போலீஸாரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவில் மழை பெய்து கொண்டே இருந்ததால் சரியாக மீட்பு பணியை மேற்கொள்ள முடியவில்லை. சம்பவ இடத்தில் 40 வீடுகள் வரை இருந்தது. இரவில் வெளிச்சம் குறைவு காரணமாக சிறிது நேரம் மீட்பு பணி நிறுத்தப்பட்டு காலையில் தொடங்கப்பட்டுள்ளது. மலையின் மேல் பகுதியில் குடிசைகள் அமைத்து வாழ்ந்தவர்களின் வீடுகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவில் இருந்து சில வீடுகள் தப்பியதாகவும் களத்தில் இருந்து செய்திகள் வந்திருக்கிறது. மீட்பு பணிகளை மாநில அமைச்சர் உதய் சாவந்த் நேரில் பார்வையிட்டு வருகிறார். ராய்கட் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் மும்பை, பால்கர், ராய்கட், ரத்னகிரி, கோலாப்பூர், சாங்கிலி, நாக்பூர், தானே போன்ற பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மழை வெள்ளம் மற்றும் மீட்பு பணிகளை சமாளிக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் மும்பையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.