மணிப்பூர் பழங்குடி இனப் பெண்களை பொதுவெளியில் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பழங்குடியினப் பெண்களுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை, நெஞ்சை கலங்கடிக்கச் செய்திருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பழங்குடிப் பிரிவின் மாநிலத் தலைவர் ப்ரியா நாஷிம்கர் ( தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்), “கடந்த 80 நாள்களாக மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. பல உயிர்கள் கொல்லப்பட்டிருக்கின்றன. பல தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. பல தரப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர்.
இந்த நிலையில், பெண்களை நிர்வாணமாக அணிவகுத்து நடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய காணொளியைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். இழிவான இந்த நிகழ்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஒரு பெண்ணாக, இந்திய குடிமகளாக வெட்கி வேதனையடைகிறேன். நேற்று மணிப்பூரில் நடந்தது, நாளை நமது பக்கத்து வீட்டில் நடக்கலாம். தேசம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.
பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராயினும் சாதி, மத, இன பாரபட்சமுமின்றி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும், மணிப்பூரில் தொடர் வன்முறையைக் கட்டுபடுத்த தவறிய பா.ஜ.க அரசை, குடியரசுத் தலைவர் உடனடியாக கலைக்க வேண்டும் . இத்தகைய அவலமான, அசாதாரணமான நிலைமையைக் கண்டும் காணமல் இருக்கும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் வெட்கித் தலைகுனிந்து, இந்த அநீதிக்கு தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.