“எம்.பி ஆகும் வாய்ப்பே இல்லாத ராகுல் காந்தியை எதன் அடிப்படையில் பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது?”
“ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கு இரண்டாண்டு தண்டனை கிடைக்க வேண்டும். தண்டனை கிடைக்க வழக்கு இருக்க வேண்டும். இப்படியாக பதியப்பட்டதுதான் இவ்வழக்கு. இந்திய சரித்தரித்திலேயே அவதூறு வழக்கிற்கு யாருக்கும் இரண்டாண்டு தண்டனை பெற்றதே கிடையாது.”
“அடுத்தடுத்த விசாரணைகளில் ராகுல் காந்தி விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருக்கிறதா?”
’’குஜராத்தை விட்டு இப்போதுதான் வெளியே வருகிறோம். இனிதான் நீதியே வர ஆரம்பிக்கும்.”
“அப்படியென்றால் குஜராத் மாநில நீதிமன்றங்களை சந்தேகிக்கிறீர்களா?”
’’நான் ஒன்றுமே சொல்லவில்லை. குஜராத்தை விட்டு இப்போதுதான் வெளியே வருகிறோம் என்கிறேன். கருணாநிதி பாணியில் பாதிதான் சொல்லுவேன். அதிலிருந்து புரிந்து கொண்டால் சரி.”
“தி.மு.க என்ன செய்தாலும் மெளனமாக இருக்குறீர்கள், என தி.மு.க கூட்டணி கட்சிகளையெல்லாம் அடிமை கட்சிகள் என எடப்பாடி விமர்சிக்கிறாரே?”
’’இந்த குற்றசாட்டை வைப்பதற்கு முன்பாக அவரிடமுள்ள அடிமைசாசனத்தை கிழித்து போட்டுவிட்டு பா.ஜ.க-வை விட்டு வெளியே வரவேண்டும். அதி.மு.க-வில் யாரைவேண்டுமானாலும் கேளுங்கள் 99% தொண்டர்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள். அடிமட்ட தொண்டர்களுக்கு விருப்பமில்லை, திணிக்கப்பட்ட கூட்டணி அது. இது எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாக தெரியும் இதைச் சொல்வதற்கு இன்னும் அவருக்கு தைரியம் வரவில்லை.”
“தமிழ்நாடு பா.ஜ.க துடிப்புடன் செயல்படுகிறது என்றால் மறுப்பீர்களா?”
“உரக்க பேசுகிற ஒரு எதிர்க்கட்சியாக தமிழ்நாடு பா.ஜ.க இருப்பதை நான் ஏற்கிறேன். மத்தியில் ஆளும் கட்சியாகவும் மாநிலத்தில் ஆளும் கட்சியை எதிர்க்கும் இடத்தில் இருப்பதாலும் அவ்வாறு தெரிகிறது. ஆனால் மக்கள் மனதில் அவர்கள் இடம்பிடிக்கிறார்களா…. என்பது சந்தேகம்தான். இந்தி, இந்துத்துவா கொள்கை கொண்ட கட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது தேர்தல் வந்தால் நிச்சயம் தெரியும்.”
“சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியா?”
“அமைச்சரவையில் ஒருவரை வைத்துக் கொள்ளுவதும் கொள்ளாததும் முதலமைச்சரின் அதிகாரத்திற்குட்பட்டது. என்னை பொறுத்தவரை அமலாக்கத்துறை என்ற இயக்கமே இருக்கக் கூடாது. இதனை சி.பி.ஐ-யின் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவோடு இணைத்துவிட வேண்டும். அமலாக்கத்துறைக்கென ஒரு சட்டதிட்டங்கள் கிடையாது. அமலாக்கத்துறைக்கு கைது மற்றும் ரெய்டு நடத்தும் அதிகாரமே தேவையற்றது. குறிப்பாக பணப் பரிவத்தணை சார்ந்த வழக்கு விசாரணைகளின் கைது நடவடிக்கைகளே அவசியமற்றவை. சம்மன் மற்றும் விசாரணையை வைத்தே இதனை முடித்துவிடலாம்.”
’’நீண்ட காலமாக பேசி வருகிறீர்கள், மாநில காங்கிரஸ் தலைவர் பதவி உங்களுக்கு கிடைக்குமா….கிடைக்காதா?”
“இவர்தான் தகுதியானவர் என தலைமை நினைத்து, அந்த பதவியை கொடுத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்வேன். அப்படி கொடுக்காவிட்டால் இது நியமன பதவிதான், போட்டியிட்டு நான் ஒன்னும் தோற்று போகவில்லை. எக்ஸாம் எழுதி பெயிலும் ஆகவில்லை. முன்பு இருந்தவர்களும், அடுத்து வருபவர்களும் நியமிக்கப்பட்டவர்கள்தான்.”
“எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில் திமுக தரப்பில் நீட் விலக்கு கோரிக்கை முன்வைக்கப்படுமல்லவா?”
“நீட் தேர்வை பொறுத்தவரை, மாநில அரசு நடத்துகிற கல்லூரிக்கு மத்திய அரசு தேர்வுகளை நடந்துவது என்னை பொறுத்தவரை நியாயம் கிடையாது. தி.மு.க நீட் விலக்கு கோரிக்கையை முன்வைக்கும் சூழலில் அன்றைக்கு இருக்கின்ற அரசாங்கம் எப்படிஅணுகப் போகிறது, நீதிமன்றங்கள் இதனை எவ்வாறு அணுகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.”
“மாநில தலைவர் விவகாரத்தில் உங்களுக்கும் மாணிக்கம் தாகூருக்கும் இடையே சில இடையூறுகள் இருப்பதாக சொல்கிறார்களே?”
“எந்த கருத்துக்கு அவருடன் நான் முரண்பட்டுள்ளேன். எனது எந்த கருத்தை அவர் முரண்பட்டுள்ளார். முதலில் நாங்கள் இருவரும் கருத்து பறிமாற்றம் செய்துகொண்டால் தானே இடையூறு வரும்.”