நெல்லை சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், நயினார் நாகேந்திரன். அவர் பா.ஜ.க-வின் சட்டமன்றக்குழுத் தலைவராகவும் உள்ளார். அவரின் மகன் நயினார் பாலாஜி, பா.ஜ.க-வின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அவர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது.
மதுரை சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலம் சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த நிலத்தை இளையராஜா என்பவரிடம் இருந்து நயினார் பாலாஜி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததாக அறப்போர் இயக்கம் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தது. அந்த நிலத்தை நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
`சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்திய அந்த நிலத்தை மீட்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும். மோசடியான பத்திரப்பதிவு செய்த நயினார் பாலாஜி மற்றும் இளையராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தியது. அதில் மோசடியாக பத்திரப்பதிவு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதால் அந்த நிலத்தின் பத்திரப்பதிவை நெல்லை மண்டல துணை பத்திரப்பதிவுத் தலைவர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், நயினார் பாலாஜி மீதான மோசடி புகார் குறித்து 15 நாள்களில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ மகனும், கட்சியின் இளைஞரணி நிர்வாகியுமான நயினார் பாலாஜி, கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.