நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஶ்ரீ நடித்த `வசந்த மாளிகை’ வெளியாகி பொன்விழா காண்கிறது. ஒரு காலத்தில் 200-வது நாளைக் கடந்து வெற்றிவிழா கண்ட படமிது. 50 வருடங்கள் கடந்திருக்கும் இப்படத்தை இப்போது ரீ-ரிலீஸ் செய்கின்றனர். `வசந்த மாளிகை’யை கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கியிருந்தார். ஏ.வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார். வசனங்களை பாலமுருகன் எழுதியிருந்தார். படத்தில் வசனங்கள் எப்படிப் பட்டிதொட்டியெங்கும் ரீச் ஆனதோ, அப்படிப் பாடல்களும் பிரபலம்.
அதிலும் கவியரசு கண்ணதாசனின் வரிகளில், கே.வி.மகாதேவனின் இசையில் ‘கலைமகள் கைப் பொருளே…’, ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்…’, ‘யாருக்காக இது யாருக்காக…’, ‘இரண்டு மனம் வேண்டும்…’, ‘குடிமகனே பெருங்குடிமகனே…’ எனத் தேனினும் இனிய தெவிட்டாத பாடல்களுக்காகவும் படம் இன்றளவும் பேசப்படுகின்றன.
‘வசந்த மாளிகை’ வெளிவந்து 50 வருடமாகிறது. அதை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கி ரசிகர்களுக்குத் தருவதற்காக வி.சி. குகநாதன் முயன்றார். இப்போது சிவாஜியின் தீவிர ரசிகரான வி.நாகராஜன் அந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறார். தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் திரையிட முழு முனைப்பில் ஈடுபட்டுள்ளார். படத்திற்கு வசனம் எழுதியவர் பாலமுருகன். அவரின் மகன் பூபதிராஜா பாலமுருகன், தெலுங்கில் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாகக் கோலோச்சிவருபவர். அவரின் அப்பா ‘வசந்த மாளிகை’ குறித்து அவரிடம் பகிர்ந்த விஷயங்களை இங்கே மனம்விட்டுச் சிலாகிக்கிறார் பூபதிராஜா.
“எங்க அப்பா சொன்ன விஷயங்களை உங்ககிட்ட சொல்றேன். தெலுங்கில் கௌசல்யா தேவி எழுதின கதைதான், ‘பிரேம் நகர்’னு வெளியானது. அந்தக் கதைதான் ‘வசந்த மாளிகை.’ ராமநாயுடு சார் தயாரிச்சார். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட சிவாஜி சாருக்கும், வசனகர்த்தாவான எங்க அப்பாவுக்கும் ஒரு சின்ன டவுட் இருந்துச்சு. ஏன்னா, ‘வசந்த மாளிகை’யின் கதை ரொம்பவே சிம்பிள் லைன்தான். எங்க அப்பா மற்றும் சிவாஜி சார் கூட்டணியில் இதற்கு முன் வெளியான ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘பட்டிக்காடா பட்டினமா’ எல்லாம் அழுத்தமான கதைகள். அப்படி ஒரு கெட்டியான லைன் ‘வசந்த மாளிகை’யில் இல்லைன்னு இந்தப் படத்தைப் பண்ணத் தயங்கினாங்களாம்.
இதையறிந்த இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் சார் (தெலுங்கில் ஜாம்பவான் இயக்குநர் ராகவேந்திரா ராவ்வின் தந்தை இவர்), ‘இதை ஒரு சாதாரண கதையா பார்க்காதீங்க. இரண்டு இதயங்கள் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான விஷயமா பாருங்க’ன்னு சொன்னதும்தான் எங்க அப்பா கன்வின்ஸ் ஆனாங்க. அதை சிவாஜி சார்கிட்ட அப்பா சொன்னதும்தான் அவரும் கன்வின்ஸ் ஆனார்.
வசனங்களுக்காக அதிகம் பேசப்பட்ட படம், ‘வசந்த மாளிகை’தான். இந்தத் தலைமுறையினர் பலரும் அதோட வசனங்களை வியந்து பேசுறாங்க. ஒருமுறை விமான நிலையத்துல டி.ராஜேந்தர் சாரைச் சந்திச்சேன். அவர் ‘வசந்த மாளிகை’யோட ஒவ்வொரு வசனத்தையும் அப்படியே சொல்லி மகிழ்ந்தார். ‘இந்தப் பரந்த உலகத்துல எங்கே என் சீட்’ என்பதுதான் முதல் டயலாக். அதைப் போல, படத்தின் கடைசியில் ‘நீ வந்துட்டே, நான் போய்க்கிட்டே இருக்கேன்’ம்பார். க்ளைமாக்ஸ்ல ஒரு வசனம் வரும், ‘நீ விஸ்கியைத்தான் குடிக்காதேன்னு சொன்னே… விஷத்தைக் குடிக்கக் கூடாதுன்னு சொல்லலையே’ன்னு வாணிஶ்ரீகிட்ட சிவாஜி சொல்லுவார். அதை அதே ஸ்லாங்ல டி.ஆர்.சார் சொன்னார். நான் ஆச்சரியப்பட்டுட்டேன். இப்படி வசனங்கள் தலைமுறை கடந்து நிற்குது.
அதைப் போல, தெலுங்கு ஸ்கிரிப்ட் விஷயமா ஒருமுறை சத்யராஜ் சாரையும், கமல் சாரையும் சந்திச்சேன். அவங்களும் டயலாக்குகளை அப்படியே சொன்னாங்க. அதிலும் சத்யராஜ் சார், ’30 தடவைக்கு மேல படத்தைப் பார்த்திருப்பேன்’னு சொன்னது பிரமிக்க வச்சிடுச்சு. நான் முப்பது வருஷத்துக்கு மேலாக தெலுங்குப் படவுலகில்தான் ரைட்டரா இருக்கேன். நான் எழுதின கதைதான் தமிழில் விஜய் நடித்த ‘பிரியமானவளே’ படமானது” என்கிறார் பூபதிராஜா.