ஒவ்வொரு சினிமாவும் நூற்றுக்கணக்கான கலைஞர்களின் ஒருமித்த உழைப்பால் மட்டுமே சாத்தியமாகிறது. அந்தந்தத் துறைசார் கலைஞர்கள் ப்ரீ-புரொடக்ஷன், புரொடக்ஷன், போஸ்ட் புரொடக்ஷன் என மூன்று பிரிவுகளில் தங்களது பணிகளைச் செய்து முடிப்பார்கள்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, டி.ஐ எனப் பல துறைகள் பற்றி நாம் பார்ப்பது படிப்பது ஏராளம். ஆனால், நம் செவிக்குப் பெரிதளவில் வந்தடையாத பல துறைகளும் ஒரு சினிமா உருவாகப் பெரும் பங்காற்றுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த `டி.ஐ.டி.’ (DIT)
ஒரு திரைப்படத்தின் புரொடக்ஷன் சமயத்தில் திரைக்குப் பின்னால் இருக்கும் ’டிஜிட்டல் இமேஜிங் டெக்னிசியன்’ எனச் சொல்லப்படுகிற டி.ஐ.டி முக்கியப் பங்காற்றுகிறார். படத்தின் ஃபுட்டேஜை ஷூட்டிங் வேளையில் படக்குழுவிடமிருந்து பெற்று அதனை போஸ்ட் புரொடக்ஷன் வரை கொண்டு செல்வதுதான் டி.ஐ.டி-யின் முக்கியப் பங்கு. இக்குழுவின் வேலைகள் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள ஒரு டி.ஐ.டி-யிடம் பேசினேன்.
இந்தத் துறைசார்ந்த தன் பணிகள் குறித்து முழுமையாக விவரிக்கத் தொடங்கினார். “டி.ஐ.டி என்பது டேட்டாவைப் பார்த்துக்கொள்வது. டி.ஐ.டி-யில் இருவகை இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பணிபுரியும் டி.ஐ.டி-யை ‘ஆன் ஸ்பாட் டி.ஐ.டி’ எனவும், அலுவலகத்தில் பணிபுரியும் டி.ஐ.டி-யை ‘ஆபீஸ் டி.ஐ.டி’ எனவும் கூறுவார்கள். ஒரு திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்தான் படம்பிடிப்பதற்கு கேமராவைத் தேர்வு செய்வார். அந்தக் கேமராவிற்கு ஏற்ற வகையில் நாங்கள் ’LUT’ (Look up table) தயார் செய்து வைத்திருக்க வேண்டும். ‘டி.எஸ்.எல்.ஆர்’ கேமராக்களில் ‘சி லாக்’, ‘எஸ் லாக்’ அமைப்புகளை வைத்துப் படப்பிடிப்பை நிகழ்த்துவார்கள். அதில் கிடைக்கும் காட்சிகளைக் காட்டிலும் சினிமா கேமராக்களை உபயோகப்படுத்தி எடுக்கும் காட்சிகளில் வண்ணங்கள் அடர்த்தியின்றிக் காட்சியளிக்கும்.
அதனை கலர் கொடுத்து மாற்றுவதற்கு ‘LUT’ அமைப்பை உபயோகப்படுத்துவோம். ஒவ்வொரு திரைப்படத்திலும் பகல் மற்றும் இரவு நேரப் படபிடிப்புகளுக்கு ஏற்றவாறு ‘LUT’ வைத்திருப்பார்கள்.
இந்த ‘LUT’ வகைகள் ரெட், அர்ரி கேமராக்களைப் பொறுத்து மாற்றம் பெறும். ஒரு டி.ஐ.டி ‘LUT’ அமைப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை முக்கியமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் பின்பு கேமராக்களைப் பற்றிப் படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றும் டி.ஐ.டி தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என்றவர், டி.ஐ.டி-களின் முக்கியப் பொறுப்புகள் குறித்து விளக்கத் தொடங்கினார்.
“நாங்கள் ஒப்பந்தமாகியுள்ள படங்களின் ஃபுட்டேஜ்களுக்கு நாங்கள்தான் முழுப் பொறுப்பு. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்தவுடனும் அதனை இரண்டு பேக் அப் எடுத்து வைத்துவிடுவோம். சில ஒளிப்பதிவாளர்கள் படப்பிடிப்பின் போது டி.ஐ.டி-களை அருகில் வைத்துக்கொள்வார்கள். அப்போதுதான் ‘LUT’ வைத்து ஃபுட்டேஜ்களைச் சரிபார்ப்பதற்கு இலகுவாக இருக்கும்.
நாங்கள் பேக் அப் எடுத்து வைத்திருக்கும் ஃபுட்டேஜஸ்தான் படத்தொகுப்பு, டி.ஐ, விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளுக்குக் கிடைக்கும். திரைப்படத்தின் ஃபுட்டேஜ் லீக் ஆகிவிட்டால் அதற்கு முழுப் பொறுப்பு டி.ஐ.டி-யைத்தான் சேரும். சில நேரங்களில், வெளிப்புறப் படப்பிடிப்புகளில் எனது பணியைச் செய்துகொண்டிருக்கும்போது என்னைச் சுற்றிக் கூட்டமாக இருந்தாலோ, லீக் ஆகிவிடும் என்கிற எண்ணம் இருந்தாலோ உடனடியாக தயாரிப்பு நிறுவனத்திடம் நான் தெரிவிக்க வேண்டும். படப்பிடிப்புத் தளத்திற்குப் பிறகு அலுவலகங்களிலும் டேப், சர்வர் என பேக் அப் எடுத்து ஃபுட்டேஜ்களை வைத்துக் கொள்வோம். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நன்மை, தீமை என இரண்டையுமே உள்ளடக்கியவைதான். அதனால் எப்போதும் டேப்களில் பேக் அப் எடுத்து வைத்துக்கொள்வோம்.
இந்த டி.ஐ.டி துறையை, பலர் ஃப்ரீலான்சிங் பணியாகவும், நிறுவனமாகவும் செய்துவருகிறார்கள். விளம்பரப் படங்களுக்கு ஃப்ரீலான்சிங் டி.ஐ.டி-யினர்தான் பெரும்பான்மையாகப் பணியாற்றுவார்கள்” என்றார்.
ஒவ்வொரு துறையிலும் பணியாற்றுவதற்குப் பல தகுதிகள் தேவைப்படும். இத்துறையின் தகுதி குறித்துப் பேசியவர், “‘படப்பிடிப்பின் சூழல், நேரம், இடம் போன்ற தன்மைக்கேற்ப பணியாளர் சமாளித்துக்கொள்வாரா?’ என்பதை எதிர்பார்ப்பார்கள். இதற்கென்று தனித்துவமாக சில துறைகளைப் பற்றிப் படித்துவைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ‘LUT’ என்கிற அமைப்பை ‘டாவின்சி’ படத்தொகுப்பு மென்பொருளை வைத்துப் பொருத்துவோம். கேமரா குறித்தான அடிப்படைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி, பணியாளர்கள் அவர்கள் மீது ஒருவித நம்பிக்கையை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.