2 அல்ல 3 பெண்களை நிர்வாணப்படுத்திய கும்பல்! மணிப்பூரில் என்ன நடந்தது? புகார்தாரர் சொன்ன ஷாக் தகவல்

இம்பால்: மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 2 அல்ல 3 பெண்களை அந்த கும்பல் நிர்வாணப்படுத்தி சித்ரவதைக்குள்ளான திடுக்கிட வைக்கும் தகவலை புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக உள்ள மணிப்பூரில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.

இங்கு குக்கி எனும் பழங்குடி மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தான் மைத்தேயி பிரிவு மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த ஊர்வலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி மக்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

இந்த வன்மறை மாநிலம் முழுவதும் வேகமாக பரவியது. துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பங்கள் அரங்கேறின. தொடர் பதற்றத்தால் அங்கிருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் சுமார் 140க்கும் அதிகமானவர்கள் வன்முறையில் இறந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் மணிப்பூர் வன்முறையின் ஒருபகுதியாக பைனோம் கிராமத்தில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்திய கும்பல் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. கடத்தல், பாலியல் தொல்லை, பலாத்காரம் என வெவ்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே தான் நிர்வாணப்படுத்தி சித்ரவதைக்குள்ளான பெண்கள் 2 பேர் அல்ல.. 3 பேர் என்ற ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து புகார்தாரர் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள புகாரில் அதுபற்றிய தகவல்கள் உள்ளன.

அதாவது வீடியோவில் 20 வயது மற்றும் 40 வயது நிரம்பிய 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டுள்ளது பதிவாகி உள்ளது. ஆனால் இன்னொரு பெண்ணும் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 50 ஆகும். இதில் 20 வயது பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த கும்பலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். இவர்களில் ஒரு ஆண் கொலை செய்யப்பட்டுள்ளார். மே மாதம் 4ம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டம் பைனோம் கிராமத்தில் 800 முதல் 1000 பேர் அடங்கிய கும்பல் அந்த குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

நவீன ரக துப்பாக்கி, ஆயுதங்களை கொண்டு தாக்கி மிரட்டியது. இதனால் 5 பேரும் வனப்பகுதிக்குள் ஓடினர். இவர்கள் 5 பேரையும் நோங்போக் செக்மாய் போலீசார் மீட்டனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கும்பல் இடைமறித்து தாக்கினர்.

பெண்களின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்றனர். அதன்பிறகு பொதுமக்களின் உதவியுடன் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 3 பெண்களும் நிவாரண முகாம்களில் உள்ளனர்” என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கிடையே தான் இந்த சம்பவத்தில் மகளிர் ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் தலையிட வேண்டும். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.