கள்ளக்குறிச்சி: கடந்த மூன்று நாட்களாக 3 மணிக்கு மேல் தான் அமைச்சர் எ.வ.வேலு தனக்கு மதிய உணவு வழங்கி வருவதாகவும் இன்று கூட மதியச் சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதான்னு தான் நினைத்தேன் எனவும் பேசி எல்லோரையும் சிரிக்க வைத்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கடந்த மூன்று நாட்களாக வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடர் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை காட்டிலும் திருவண்ணாமலையிலும், கள்ளக்குறிச்சியிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாகமிகு வரவேற்பு அளித்து அசத்தியிருந்தார் அமைச்சர் எ.வ.வேலு.
உதயநிதி பயணிக்கும் பாதைகளெல்லாம் அவரை வரவேற்க பெரும் கூட்டத்தை கூட்டியிருந்தார் அமைச்சர் எ.வ.வேலு. அதேபோல் நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. அந்தளவுக்கு தொடர்ச்சியாக நாள் முழுவதும் உதயநிதி ஸ்டாலினை வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த மூன்று நாட்களாக எ.வ.வேலுவுடன் தான் தாம் இருப்பதாகவும் கடந்த திங்கள்கிழமை அன்று மதியம் 3 மணிக்கு மதியச் சாப்பாடு கொடுத்தார் என்றும், செவ்வாய்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மதியச் சாப்பாடு கொடுத்தார் எனவும் கூறினார்.
மேலும், இன்னைக்கு மதியச் சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதான்னு நினைத்தேன் என்று கூறி அமைச்சர் எ.வ.வேலுவை தனது தாத்தா கருணாநிதி பாணியில் கலாய்த்தார் உதயநிதி. மேலும், போனால் போகிறது என நினைத்து புதன்கிழமை 3.30 மணிக்கு எ.வ.வேலு மதியச்சாப்பாடு கொடுத்ததாக தெரிவித்தார்.
4 மாவட்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அடுத்ததாக கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.