சென்னை: தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் D 50 படத்தை அவரே இயக்கி ஹீரோவாக நடிக்கிறார்.
இந்நிலையில், தனுஷ் நடித்த மரியான் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை படக்குழுவினர் கொண்டாடினர்.
அப்போது “தனக்கு 40 வயது ஆகிவிட்டதால் இனி காதல் படங்களில் நடிக்கப் போவதில்லை” என தனுஷ் கூறியுள்ளார்.
இனி காதல் படங்களில் நடிக்கப் போவதில்லை
கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான தனுஷ், தற்போது பான் இந்தியா நடிகராகவும் கலக்கி வருகிறார். அதிகபட்சமாக ஹாலிவுட்டிலும் தடம் பதித்துவிட்ட அவர், தற்போது தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் D 50 படத்தை தனுஷே இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது நடிப்பில் வெளியான மரியான் படத்தின் 10வது ஆண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. பரத் பாலா இயக்கத்தில் தனுஷ், பார்வதி நாயர், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்த மரியான், 2013ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி வெளியானது. இந்தப் படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். காதல் பின்னணியில் ரொமண்டிக் மூவியாக வெளியான மரியான், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதேபோல், AR ரஹ்மான் இசையில் அனைத்துப் பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தன. தனுஷின் நடிப்பிற்கு மிகப் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்த மரியான் படத்தின் 10வது ஆண்டு கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடினர். ஜூம் மீட்டிங் எனும் இணையதளம் வழியாக நடைபெற்ற இதில், தனுஷ், ஏஆர் ரஹ்மான், இயக்குநர் பரத் பாலா ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் மூவரும் மரியான் படம் குறித்த நினைவுகளையும் பல சுவாரஸ்யங்களையும் பகிர்ந்து கொண்டனர். மரியான் போன்ற காதல் பின்னணி கொண்ட படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் எனக் கூறிய தனுஷ், அதற்காக இயக்குநர் பரத் பாலாவுக்கு தனது நன்றியை தெரிவித்தார். முன்னதாக தனுஷிடம் இயக்குநர் பரத் பாலா ஒரு வேண்டுகோள் வைத்தார்.
அதாவது மரியான் போன்ற காதல் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என தனுஷிடம் கேட்டுக் கொண்டார். அதனைக் கேட்டு சிரித்த தனுஷ், “எனக்கு 40 வயசு ஆகிருச்சு… லவ் படமெல்லாம் இனி செட்டாகாது… அடுத்த தலைமுறை நடிகர்கள் பண்ணட்டும்!” எனக் கூறி நைஸ்ஸாக நழுவிக் கொண்டார். தனுஷின் இந்த பதிலைக் கேட்டு பரத் பாலாவும் ஏஆர் ரஹ்மானும் அவரை கலாய்த்தது சுவாரஸ்யமாக இருந்தது.
அதேநேரம் தனுஷின் இந்த முடிவை பார்த்த அவரது ரசிகர்கள், இனி தலைவர் கேங்ஸ்டர், ஆக்ஷன் ஜானர் படங்களில் நடிக்க ரெடியாகிவிட்டதாக கூறி வருகின்றனர். இன்னும் சிலரே அடுத்த தலைமுறை நடிகர்களுக்காக தனுஷ் எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது என பாராட்டியுள்ளனர். இன்னொரு பக்கம் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற சீனியர் நடிகர்கள் காதல் படங்களில் நடிப்பதை தனுஷ் மறைமுகமாக கலாய்த்துள்ளார் எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.