சூர்யாவின் `கங்குவா’ படத்தின் முன்னோட்ட வீடியோ பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது என்றும், சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ம் தேதி அதை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர் என்றும் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘கங்குவா’. இதன் கிளிம்ஸ் வீடியோ வருகிற 23ம் தேதி வெளியாகிறது என்று அறிவித்துள்ளனர். அதன் போஸ்டரில் ‘ஒவ்வொரு தழும்புகளும் ஒரு கதையை கொண்டிருக்கிறது’ என உணர்த்தும் விதமாக அஜானுபாகுவான சூர்யாவின் வாளேந்திய கையும் இடம்பெற்றிருந்தது. இது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இங்கே;
‘கங்குவா’ 3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக பத்து மொழிகளில் தயாராகிவரும் படம். சூர்யாவின் மற்ற படங்களைவிட இரு மடங்கு பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. சூர்யாவின் வித்தியாசத் தோற்றத்திற்கான மேக்கப் போடுவதற்கு மட்டுமே தினமும் இரண்டரை மணி நேரம் எடுக்கும். அதன்பின் படப்பிடிப்பு நடக்கும் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு நடந்தேதான் மொத்த படக்குழுவும் சென்றிருக்கின்றனர். அப்படிப்பட்ட சூழலிலும் காலை ஆறரை மணி ஷாட்டிற்கு ரெடியாக நிற்பார் சூர்யா. பீரியட் போர்ஷன் முழுவதும் கொடைக்கானலில்தான் எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்னர் சென்னை ஈவிபி ஃபிலிம்சிட்டியில் கிளிம்ஸ் வீடியோவிற்காக பீரியட் காலகட்டத்துக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டன. அதில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஜிம்பாய்ஸ் பங்கேற்றனர். படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது என்றாலும் அதன் கிராபிக்ஸ் வேலைகளுக்கு சில வாரங்கள் தேவைப்பட்டன.
அத்துடன், படத்தை பற்றிய முன்னோட்டமாக சில காட்சிகளையும் இந்த கிளிம்ஸ் வீடியோவில் வெளியிட உள்ளனர். இன்று கிளிம்ஸ் வீடியோ எப்போது வெளிவரும் என்று அறிவித்ததை போல, அடுத்து எத்தனை மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு போஸ்டரும் வரவிருக்கிறது. அனேகமாக ஜூலை 22 ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கிளிம்ஸ் வீடியோ வெளியாகலாம். சூர்யாவின் பிறந்த நாள் பரிசாக இந்த கிளிம்ஸ் நிச்சயம் திகழும் என்கிறார்கள்.