கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் பேச்சு வைரலாகியிருக்கிறது.
“லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் படம் இயக்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.” என்று சொல்லி, ரஜினி படத்தை இயக்குகிறார் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். அந்த படத்தை தயாரிக்கப்போவது யார் என்பது குறித்து கோலிவுட்டில் விசாரித்ததில் கிடைத்தவை இவை.
ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்து, ‘லால் சலாம்’ படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்த’ படத்திற்கு பின் மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ‘அண்ணாத்த’விற்கு முன்னர் லைகாவின் தயாரிப்பில் ‘தர்பார்’ பண்ணினார். லைகாவைப் பொறுத்தவரையில் ரஜினி மீது பெரும் மதிப்பு வைத்திருக்கிறது.
ரஜினியுடன் தொடர்ந்து படம் பண்ணவும் விரும்புகிறது. அந்த நட்பில் தான் ஐஸ்வர்யா ரஜினிக்கே ‘லால் சலாம்’ கிடைத்தது. லைகாவின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படம் ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போய்விட, அதன் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்க விரும்பினார். சிபியும் லைகாவில் கமிட் ஆனார். ரஜினிக்கென அவர் கதை எழுதத் தனியாக அலுவலமும் அமைத்துக் கொடுத்தனர். ஆனால் சிலபல காரணங்களால் சிபி புராஜெக்ட் டிராப் ஆனது. இதற்கிடையே ரஜினி சன் பிக்சர்ஸுக்கு சென்று விட்டார்.
‘ஜெயிலர்’ படத்திற்கு முன்னர் ரஜினி லோகேஷ் கனகராஜ், அ.வினோத் உள்பட பலரிடமும் கதைகள் கேட்டு வந்தார். இந்நேரத்தில் சன் பிக்சர்ஸ், நெல்சன் கூட்டணி இணைந்தது. ‘ஜெயிலர்’ உருவானது. ரஜினி அடுத்து ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேலின் இயக்கத்தில் நடிக்கும் படத்தை லைகாவே தயாரிக்கிறது. ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி, அதனை முடித்துவிட்டு த.சென்.ஞானவேலின் படத்திற்கு வருவார். ரஜினி இப்போது மாலத்தீவில் ஓய்வில் இருக்கிறார். அவர் வந்த பின்னர், ‘தலைவர் 170’ படத்தைத் தொடங்கத் திட்டமிட்டு வருகின்றனர். லோகேஷ் – ரஜினியின் படத்தை தயாரிக்க சன்பிக்சர்ஸ் பெரிதும் விரும்புகிறது என்கிறார்கள். இதற்கிடையே ரஜினியை வைத்து ‘கபாலி’ தயாரித்த தாணுவும், ரெடியாக இருக்கிறார்.
இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய ‘வை ராஜா வை’ படத்தை ஏஜிஎஸ். நிறுவனம்தான் தயாரித்திருந்தது. இதனால் அவர்களும் ரஜினியுடன் இணைய வேண்டும் என நீண்ட வருடமாகவே முயற்சி வருகின்றனர். இதற்கிடையே கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் – ரஜினி இணையும் படத்தை தயாரிக்க கமலின் ராஜ்கமல் நிறுவனமும் ஒரு பக்கம் முயன்று வருகிறது. இதுகுறித்து லோகேஷிடம் பேசியும் வருவதாகச் சொல்கிறார்கள். ஆக, லோகேஷ் இணையும் படத்தை தயாரிக்க நான்கு பெரிய நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
லோகேஷ் இப்போதுதான் விஜய்யின் ‘லியோ’வை முடித்திருப்பதால், ரஜினி படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை இன்னமும் தொடங்கவில்லை. ‘லியோ’ ரிலீஸுக்கு பின்னர்தான், ரஜினிக்கான கதையைத் தொடுகிறார். அதற்குள் படத்தை தயாரிப்பது யாரென முடிவாகிவிடும். அனேகமாக இந்தாண்டு டிசம்பரில் ரஜினியின் பிறந்த நாளன்று, இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல்.