உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலரால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் ஆப். இதன் சேவை நேற்று நள்ளிரவில் தற்காலிகமாக முடங்கியது.
வாட்ஸ் ஆப் சேவை முடக்கம்:
குறுந்தகவல்கள், வீடியோ-ஆடியோ கால்கள், குரல் மூலம் தகவல்கள் அனுப்புதல் என பல சேவைகளை உள்ளடக்கியது வாட்ஸ் ஆப். இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கனக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்தியாவில் இதற்கு அதிகம் பயனாளர்கள் உள்ளனர். நேற்று நள்ளிரவு 1.15 மணியளவில் வாட்ஸ் ஆப்பில் கால்கள் மற்றும் குறுந்தகவல்கள அனுப்ப முடியாமல் பயனாளர்கள் திணறியுள்ளனர். இதுகுறித்து பல ஆயிரம் மக்கள், பிற சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் புகார் தெரிவித்திருந்தனர். 40 முதல் 50 நிமிடங்களுக்கு வாட்ஸ் ஆப்பின் சேவை முடங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சில பயனாளர்கள் கருத்து தெரிவிக்கையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் ஆப் செயலியின் சேவை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறியிருக்கின்றனர். மெட்டா நிறுவனத்திற்கு இந்த சேவை முடக்கத்தால் சில இடையூறு வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
எந்தெந்த நாடுகளில் பாதிப்பு:
வாட்ஸ் ஆப் செயலியின் முடக்கம், ஒட்டுமொத்தமாக அனைத்து பயனாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள பலர் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துகின்றனர். அடில், 1 லட்சத்து 77 ஆயிரம் பேர் தங்களுக்கு வாட்ஸ் ஆப் செயலி வேலை செய்யவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். இதே போல, இந்தியாவிலும் சுமார் 15,000 பேர் தங்களுக்கு வாட்ஸ் ஆப் செயலி செயல்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சுமார் 26,000 பேர் தங்களால் வாட்ஸ் ஆப் செயலியை உபயோகிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இவர்கள் தங்கள் புகார்களை மெட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு வந்தனர்.
மெட்டா நிறுவனம் கூறுவது என்ன..?
பயனாளர்களின் புகார்களுக்கு உடனடியாக எந்த பதிலும் கொடுக்காமல் இருந்த மெட்டா நிறுவனம், பின்பு தங்களின் வலைதள பக்கத்தில் குறுந்தகவல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் தங்கள் வாட்ஸ் ஆப் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதன் பிறகு வாட்ஸ் ஆப் சேவை மீண்டும் பழைய நிலைக்கு மாறியது.
வாட்ஸ் ஆப்பை அதிகம் பயன்படுத்தும் நாடுகள்:
வாட்ஸ் ஆப் செயலி 2009ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளுள் முதலாவது இடத்தை பிடித்திருக்கிறது வாட்ஸ் ஆப். இந்தியாவில்தான் வாட்ஸ் ஆப் பயனாளர்கள் அதிகம் பேர் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, சுமார் 487.5 மில்லியன் பயனாளர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பிற நாடுகள்:
இந்தியாவிற்கு அடுத்தபடியாக வாட்ஸ் ஆப் உபயோகிப்பவர்களை அதிகம் கொண்ட நாடு, பிரேசில். இதில் மொத்தம் 118.5 பேர் வாட்ஸ் ஆப் உபயோகிக்கின்றனர். இந்தோனேசியா, அமெரிக்கா, ரஷ்யா, மெக்ஸிகோ போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இண்டர்நெட் சேவையை பயன்படுத்தும் 69 சதவிகிதம் பேர் வாட்ஸ் ஆப்பை உபயோகிப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 180 நாடுகளில் 60 வித்தியாசமான மொழிகளில் வாட்ஸ் ஆப் செயலி உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ் ஆப் தடை செய்யப்பட்ட நாடுகள்
சில பாதுகாப்பு காரணங்களுக்காக வாட்ஸ் ஆப் செயலியை சில உலக நாடுகள் தடை செய்துள்ளன. ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் இதே போன்ற வேறு சில ஆப்ஸ்களை உபயோகிக்கின்றனர்.
கத்தார் நாட்டில் வாட்ஸ் ஆப் உள்பட ஸ்கைப், ஃபேஸ் புக், ஃபேஸ் டைம் போன்ற ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இங்கு இந்த செயலிகளை உபயோகிப்பது சட்டப்படி குற்றமாகும்,
தென் கொரியாவிலும் வாட்ஸ் ஆப் தடை செய்யப்பட்டுள்ளது. எதிரி நாடுகள் இந்த செயலி மூலம் தங்கள் நாடுகளின் தகவல்களை திருடும் என்ற சந்தேகம் இந்நாட்டு அரசுக்கு உள்ளதால் இதன் சேவை இங்கு முடக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கம் தங்கள் மக்களின் மொபைல் போன்களுக்கு வரும் அனைத்து விஷயங்களையும் கண்காணிப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், வாட்ஸ் ஆப் செயலி உபயோகிப்பவர்களின் குறுந்தகவல்களை அவர்களால் படிக்க முடியாமல் போவதால் இதற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.