சென்னை: சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை, 4-வது முறையாக வெற்றிகரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வுநிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 170 கி.மீ தொலைவும்,அதிகபட்சம் 36,500 கி.மீ தொலைவும்கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 4-வது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு:
சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இதுவரை 3 முறை மாற்றப்பட்டது. தொடர்ந்து 4-வது முறையாக நேற்று மதியம் 2 முதல் 3மணி அளவில் விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரமானது உயர்த்தப்பட்டது.
குறைந்தபட்சம் 233 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 71,351 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. சர்வதேச நிலவு தினத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலவுக்கான பயணத்தில் சற்று முன்நோக்கி நகர்ந்துள்ளோம்.
அடுத்தகட்டமாக சந்திரயானின் பயணப்பாதை ஜூலை 25-ம் தேதி மாற்றி அமைக்கப்படும். அதன்பின் ஆகஸ்ட் 1-ல் புவி வட்டப் பாதையில் இருந்து விலகி விண்கலம் நிலவை நோக்கி பயணிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.