முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து, அவரின் சகோதரர் மகன் அஜித் பவார் தலைமையில் தனி அணியாக பிரிந்துள்ளனர். அவர்களில் 9 பேர் மகாராஷ்டிரா பா.ஜ.க.கூட்டணி அரசில் சேர்ந்துள்ளனர். தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்ற அஜித் பவார் காய்களை நகர்த்தி வருகிறார். இதற்காக கட்சியின் எம்.எல்.ஏ.க்களை தனது பக்கம் இழுக்கும் வேலையில் அஜித் பவார் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே மகாராஷ்டிராவில் தனக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
தற்போது நாகாலாந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் தாங்கள் அஜித் பவாருக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே நாகாலாந்தில் உள்ள பா.ஜ.க.கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமல்லாது கட்சி நிர்வாகிகள் அனைவரும் அஜித் பவாருக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். நாகாலாந்து கட்சி நிர்வாகிகளின் இம்முடிவு சரத் பவாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கட்சியை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கும் சரத் பவாரின் முயற்சிக்கு இது பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியில் இருந்து வெளியேறிய அஜித் பவார் மற்றும் 8 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி மகாராஷ்டிரா சபாநாயகரிடம் சரத் பவார் தரப்பில் மனுக்கொடுக்கப்பட்டுள்ளது. அஜித் பவாரும் தன்னை கட்சியின் தலைவர் என்று அறிவித்துக்கொண்டுள்ளார். சமீபத்தில் சரத் பவாருடன் இணையும் விதமாக அஜித் பவாரும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சரத்பவாரை இரண்டு முறை சந்தித்து பேசினர். ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்ற அஜித் பவாரின் கோரிக்கையை சரத் பவார் நிராகரித்துவிட்டார். அஜித் பவார் தேர்தல் கமிஷனில் தனது அணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.