திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற்றது. இந்தத் தேரினை பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பது வழக்கம்.
அதன்படி ஏராளமான பெண்கள் திரண்டு ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கும் ஐயாறப்பர் கோயில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். அப்பர் பெருமானுக்குக் கயிலைக்காட்சி கொடுத்த சிறப்பை பெற்ற இந்தக்கோயில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமானது.
ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா இங்கு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐயாறப்பர் உடனுறை அறம் வளர்த்த நாயகிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு தீபாரதணை காட்டி கொடியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தினமும் அறம் வளர்த்த நாயகி சிறப்பு அலங்காரத்தில் காலை பல்லக்கிலும், இரவு சேஷம், கிளி, சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.
பெண்கள் விரதம் இருந்து இந்தத் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்வது வழக்கம். அதன்படி, ‘ஐயாறப்பா’ என்னும் கோஷங்கள் முழங்க பெண்கள் மட்டுமே தேரை வடம் பிடித்து இழுத்தது சிறப்பாக அமைந்தது. முன்னதாக அறம் வளர்த்த நாயகிக்கு மேல வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
பின்னர், அலங்கார தீபாரதனை மற்றும் பஞ்சமுக தீபாரதனை காட்டப்பட அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதையடுத்து பெண் பக்தர்கள் மட்டுமே ஓம் சக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை தருமை ஆதீன 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யர் சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி சொக்கநாத தம்பிரான் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தேரோட்டம் காரணமாகத் திருவையாறு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இது குறித்து பெண் பக்தர்கள் சிலரிடம் பேசினோம். “அம்பாளுக்காக ஆடிப்பூர விழா இந்தக் கோயிலில் விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். விழா நாள்களில் பெண்கள் விரதம் இருப்பதுடன் பெண்கள் மட்டுமே தேரை வடம் பிடித்து இழுப்பது வழக்கம். இது இன்றைக்கும் தொடர்கிறது. வேண்டிக்கொண்டு விரதம் இருந்து தேரை வடம் பிடித்து இழுத்தால் வேண்டியவற்றை அம்பாள் நிறைவேற்றி தருவாள் என்பது இக்கோயிலின் சிறப்பு.
அதன் படி இன்று பெண்கள் மட்டுமே திரண்டு வந்து அம்மன் சந்நிதிக்கான கோபுர நுழைவாயிலிருந்து தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர். உதவிக்காக மட்டும் சில ஆண்கள் அவ்வப்போது தேரை இழுத்தனர். ஆடிக் காற்றுக்கு இடையே பெண்கள்கூடி நின்று இழுக்க அழகுறத் தேர் ஆடி அசைந்து சென்றதைக் காண கண் கோடி வேண்டும்” என்றனர்.