கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதியின் நினைவிடத்திலேயே பேனா சிலையை நிறுவ தமிழ்நாடு அரசு பரிசீலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் நினைவாக வைக்கப்படும் பேனா சின்னம் கடலில் வைக்கப்போவதில்லையா என்பது குறித்து அலசினோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் மெரினா கடற்கரையில் அமையவுள்ளது. அதோடு வங்கக்கடலில் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் நிறுவப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. கலைஞர் நினைவிட வளாகத்திற்கும் பேனா சின்னம் அமையும் இடத்திற்கும் இடையில் கடற்கரையில் 290 மீட்டரும், கடலுக்குள் 360 மீட்டர் நீளத்துக்குமான 9 மீட்டர் அகலம் கொண்ட பாலம் அமையவுள்ளது . இந்தப் பாலம் கடற்கரை மட்டத்தில் இருந்து சுமார், 6 மீட்டர் உயரத்தில் அமையும். பேனா நினைவு சின்னமானது 137 அடி உயரத்தில் அமையும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவது, மத்திய அரசிடம் அனுமதி கேட்பது என பூர்வாங்க பணிகளை ஏற்கனவே தொடங்கியிருந்தது. இதற்கு நாம் தமிழர், அ.தி.மு.க என பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. பல்வேறு எதிர்ப்புகள் எழுந்திருந்தாலும் சில நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுசூழல் அமைச்சகமும் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி கொடுத்துவிட்டது. அதுமட்டுமின்றி கடலில் பேனா சிலை வைக்கக் கூடாதென தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
அதன்பின்னர் பேனா நினைவு சின்னம் அமைவதில் பெரிதாக எந்த சிக்கலும் இல்லையென உறுதியான சூழலில், விரைவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டன. இந்நிலையில், `ஜூலை 17 ஆம் தேதியன்று கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் கடலில் அமைக்கப்பட வாய்ப்புகள் இல்லை. பேனா சின்னம் கடலில் வைக்கப்படுவதற்கு பதிலாக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திலேயே சிறியதாக அமைக்கப்பட உள்ளது’ என செய்திகள் பரவின.
கருணாநிதியின் நினைவிட வளாகத்திலேயே பேனா நினைவுச் சின்னம் அமைக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் இதுகுறித்து தமிழ்நாடு அரசு தரப்பிலோ, தி.மு.க தரப்பிலோ எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களோ வெளியாக இல்லை என்பது குறிப்பிடதக்கது.
இது குறித்து நம்மிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வெற்றிச்செல்வம், “ஆரம்ப கட்டத்தில் பேனா நினைவுச் சின்னம் கரையிலே அமைவதாகத்தான் திட்டம். பின்னர் அதனை கடலுக்குள் வைக்க வேண்டும் எனக் கருத்துகள் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெறும் வேலைகள் வேக வேகமாக நடந்தன. அதன்படி பேனா நினைவுச் சின்னத்தை கடலில் நிறுவன தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்துவிட்டன. அதேசமயம் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி பல்வேறு திட்டங்கள் தொடங்கப்படுகின்ற இவ்வேளையில், கருணாநிதிக்காக கொண்டுவரக்கூடிய எதுவும் சர்ச்சைக்குள்ளாகக் கூடாதவையாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விரும்புவதாக தெரிகிறது. ஆகவேதான் கடலுக்குள் வைக்காமல் கருணாநிதியின் சமாதியிலேயே வைக்கலாம் என்ற பேச்சுகள் சமீபத்தில் எழுந்துள்ளன. அதன்படி கடற்கரையில் கருணாநிதியின் சமாதியிலேயே பேனா நினைவுச் சின்னம் வைக்கப்படும் என்ற பேச்சு அடிப்படுகிறது.” என்றார் வெற்றிச்செல்வம்.
இது தொடர்பாக விளக்கம் கேட்க தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்… “இது தவறான செய்தி. கலைஞர் கருணாநிதியின் நினைவாக கடலில் வைக்கப்படும் பேனா சிலை சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தொடங்கி துறை வாரியாக மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி எல்லோருமே பேனா நினைவு சின்னத்தை நிறுவ க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்கள்.
பேனா சிலை வைப்பதை சட்ட ரீதியாகவோ அமைப்பு ரீதியாகவோ இனிமேல் யாரும் தடுக்க இயலாது. பேனா நினைவு சின்னம் குறித்து எந்தவொரு விவாதமும் சமீப நாள்களில் நடக்கவே இல்லை. பேனா சிலையை கடலில் வைக்காமல் கலைஞரின் நினைவிடத்தில் வைக்கப்படும் என்று வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானது. இதுதொடர்பாக திமுகவோ, தமிழ்நாடு அரசோ எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்கிறார்.