செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று (ஜூலை21) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேல்மருத்துவத்தூரில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள்.
இங்கு ஆடிப்பூரம் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் இங்கு ஆடிப்பூர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 52-வது ஆடிப்பூர விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று (ஜூலை21) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பிறப்பித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவடட்த்தில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 5ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.