சென்னை: ஹாலிவுட் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓபன்ஹெய்மர்’ இன்று வெளியானது.
அணு விஞ்ஞானியான டாக்டர் ராபர்ட் ஓபன்ஹெய்மரின் பயோ பிக் படமாக இது உருவாகியுள்ளது.
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஓபன்ஹெய்மர் படத்துக்கு இதுவரை பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன.
இந்நிலையில், கோலிவுட் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ஓபன்ஹெய்மர் படத்தை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
Oppenheimer ப்ளூ சட்டை விமர்சனம்: ஹாலிவுட்டில் மெமென்டோ, தி டார்க் நைட், இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டன்கிர்க், டெனெட் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஓபன்ஹெய்மர்’ இன்று வெளியாகியுள்ளது. உலகளவில் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு இந்தியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் ஒருவாரத்துக்கான டிக்கெட்டுகள் முழுவதுமாக புக் ஆகிவிட்டன. முக்கியமாக இந்தப் படத்தை ஐமேக்ஸ் திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஓபன்ஹெய்மர் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்க அணு விஞ்ஞானியான ராபர்ட் ஓபன்ஹெய்மரின் பயோ பிக்காக இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும், இது நான் லீனியர் திரைக்கதையில் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், முதல் சீனிலேயே அணுகுண்டை கண்டுபிடித்து ஹிரோஷிமா-நாகசாகி மீது போட்டதும், ஓபன்ஹெய்மர் மீது விசாரணை கமிஷன் நடைபெறுகிறது. அதாவது இந்த அணுகுண்டு ரகசியங்களை மற்ற நாடுகளுக்கு கொடுத்திருப்பார் அல்லது இவர் உளவாளியா என்ற சந்தேகத்தில் அமெரிக்க அரசு விசாரணை மேற்கொள்கிறதாம். இதனிடையே ஓபன்ஹெய்மர் இரண்டு பெண்களை காதலிப்பதும் அவர்களை திருமணம் செய்வதும் வருகிறது என்றுள்ளார் ப்ளூ சட்டை.
அணுகுண்டு கண்டுபிடிக்க ஓபன்ஹெய்மர் எவ்வளவு கஷ்டப்பட்டார்… அதற்கான சோதனைகள் நடத்தப்பட்டது… ஹிரோஷிமா நாகசாகி மீது வீசப்பட்டபோது என்னென்ன விளைவுகள் ஏற்பட்டன என்பதை பார்க்கத்தான் இந்தப் படத்தை பார்க்கப் போனதாக அவர் கூறியுள்ளார். ஆனால், படத்தில் அணுகுண்டு கண்டுபிடிக்க அவர் பட்ட கஷ்டங்கள் மட்டுமே இருப்பதாகவும், அதன்பின்னால் ஏற்பட்ட பின்விளைவுகள் குறித்து விஷுவலாக எதுவுமே இல்லை என விமர்சித்துள்ளார்.
ஆனால், சீரியலில் சொல்வது மாதிரி அணுகுண்டை ஹிரோஷிமா நாகசாகி மீது போட்டாச்சுன்னு ஈஸியா சொல்லிட்டாங்க. அதாவது “யாரோ செத்துட்டாருன்னு சொல்லி மாலைய போட்டுவிடுவாங்கள… அந்த மாதிரி சிம்பிளா சுருக்கமா முடித்துவிட்டதாக” ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். இதனால் ஓபன்ஹெய்மர் படம் பார்க்கவே சப்புன்னு ஆகிவிட்டதாகவும் அவர் கலாய்த்துள்ளார்.
அதேபோல், பாம் தயாரிப்பது பற்றிய கதைக்குள்ளாவது போவார்கள் எனப் பார்த்தால், அதுவும் இல்லாமல் முக்கால் மணி நேரம் கழித்து தான் மெயின் கதைக்குள் போவதாகவும், அதுவும் மொக்கையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். நல்ல வேளையாக சப்-டைட்டில் போட்டதாகவும், இல்லையென்றால் சட்டைய கிழிச்சிட்டு தான் வெளிய வரவேண்டியிருக்கும் எனக் கூறியுள்ளார். அதேபோல், ஓபன்ஹெய்மர் அழுத்தமாகவோ எமோஷனலாகவோ இல்லை என்றுள்ள ப்ளூ சட்டை, இது ரசிகர்களுக்கு கனெக்ட் ஆக வாய்ப்பே இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
வழக்கமாக கிறிஸ்டோபர் நோலன் படம் யுனிவர்சல்லாக இருக்கும், உலகில் உள்ள எல்லாரும் ரசிக்க முடியும். ஆனால், ஓபன்ஹெய்மர் அமெரிக்கர்களுக்கான படமாக மட்டுமே உருவாகியுள்ளது. விஷுவல், சவுண்ட் எபெக்ட் என எதுவும் தனிச் சிறப்பாக இல்லை. இதற்காக ஐமேக்ஸ் தியேட்டர் செல்ல அவசியமே கிடையாது. சப்-டைட்டில் இருந்தால் மட்டும் போதும், இல்லையென்றால் சட்டைய தான் கிழிக்க வேண்டியிருக்கும் எனக் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக இரண்டாவது உலகப் போர் குறித்து எடுக்கப்பட்ட ஓபன்ஹெய்மர் சரியான உப்புமா படம். மற்றபடி இதில் சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லையென விமர்சனம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இவரின் விமர்சனத்தை கணக்கிட்டால் ஓபன்ஹெய்மர் படத்துக்கு 3 ஸ்டார் ரேட்டிங் கூட அதிகம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.