உருகுவே கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய 2 ஆயிரம் பென்குவின்கள்!

மாண்ட்டெவிடியோ,

தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 2 ஆயிரம் பென்குவின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. மெகலானிக் பென்குவின் என்று அழைக்கப்படும் இவை, அட்லாண்டிக் கடலில் உயிரிழந்து, பின்னர் உருகுவே கடற்கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பென்குவின்கள் உயிரிழக்க என்ன காரணம் என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கரை ஒதுங்கிய பென்குவின்களுக்கு இன்புலுயென்சா காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதே சமயம் கரை ஒதுங்கிய பென்குவின்கள் அனைத்தும் இளம் வயதுடையவை என்றும், அவற்றின் வயிற்றில் உணவு பொருட்கள் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே உணவு பற்றாக்குறை காரணமாக பென்குவின்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், இது தொடர்பாக அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.