கரும்பு கொள்முதலுக்கு மத்திய அரசு ஒரு டன்னுக்கு ரூ.95 மட்டுமே உயர்த்தியிருப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்க கூடிய செயலாகும். டன்னுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூரில் கையில் கரும்புடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது கவனம் பெற்றது.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், ஒன்றிய அரசு கரும்பு கொள்முதலுக்கு ஒரு டன்னுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை பிரிவுத் தலைவர் கந்தவேல், மாநிலச் செயலாளர் நாராயணசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான விவ்சாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் கையில் கரும்புகளை பிடித்து கொண்டு கோஷமிட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், உரங்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. கரும்பு உற்பத்திக்கான செலவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கரும்பு வெட்டுக் கூலியும் உயர்ந்துள்ளது. ஆனால் கரும்புக்கான கொள்முதல் விலை மட்டும் உயரவில்லை.
எனவே மத்திய அரசு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் சாமி.நடராஜன் பேசியதாவது, ”ஒன்றிய அரசு கரும்பு கொள்முதலுக்கான தொகையை ஒரு டன்னுக்கு ரூ.95 மட்டும் உயர்த்தியிருப்பது விவசாயிகளை வஞ்சிக்க கூடிய செயலாகும்.
ஒரு டன்னுக்கான உற்பத்தி செலவு ரூ, 2,500 முதல் 2,700 வரை ஆகிறது. ஆனால் ஒன்றிய அரசு தவறாக கணக்கிட்டு ஒரு டன்னுக்கு ரூ.1,570 மட்டுமே ஆவதாக சொல்கின்றது. வெட்டு கூலி மட்டுமே ரூ.1,200 ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் விலை உயர்வதால் கரும்பு உற்பத்திக்கான செலவு அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு ஒரு டன்னுக்கு ரூ.95 மட்டுமே உயர்த்தியிருக்கிறது.
ஏற்கனவே வழங்கி தொகையுடன் சேர்த்தால் ரூ.2,919 தான் கிடைக்கும். இது கரும்பு விவசாயிகளுக்கு கசப்பை தந்துள்ளது. ஒரு டன்னுக்கு ரூ.5,000 தந்தால் மட்டுமே கட்டுபடியாகும் கரும்பு விவசாயிகள் காக்கப்படுவார்கள். ஒன்றிய அரசு கரும்பு விவசாயிகள் படும் துயரத்தை கவனத்தில் கொண்டு உடனடியாக உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும்” என்றார்.