இந்தியாவில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக, நேற்று முன்தினம் (ஜூலை 20) மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், இந்திய சந்தைகளில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் போதுமான அளவு கிடைப்பதை உறுதிசெய்யவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
இன்னொருபக்கம், இந்தியாவில் கடந்த ஓராண்டில் சில்லறை விற்பனையில் அரிசி விலை 11.5 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும், அதிலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு வெளியிட்டிருக்கும் இத்தகைய அறிவிப்பு தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்களைப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.
ஏற்கெனவே, உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பால் தானிய பற்றாக்குறை நிலவுகையில், உலகளவில் அரிசி ஏற்றுமதியில் பெரும் பங்காற்றும் இந்தியா, திடீரென பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடைவிதித்திருப்பது, வெளிநாடுகளில் அரிசியின் விலையுயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது.
அதன் உடனடி எதிர்வினையாகத்தான், அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் அரிசியை மூட்டை மூட்டைகளாக வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். இது தொடர்பாக, அமெரிக்க பல்பொருள் அங்காடியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதனால், அமெரிக்காவில் ஒருவருக்கு ஒரு மூட்டை அரிசி மட்டுமே என்ற முறையையும் பல பல்பொருள் அங்காடிகள் கொண்டுவந்திருக்கின்றன. மேலும், இந்தியாவின் இத்தகைய அறிவிப்புக்கு முன் அமெரிக்காவில் 22 டாலராக இருந்த ஒரு மூட்டை அரிசி, தற்போது 32 டாலர் முதல் 47 டாலர் வரை விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.