சென்னை: மணிப்பூரில் கடந்த 2.5 மாதங்களுக்கு மேலாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனையுடன் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வன்முறை நிலவி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த மணிப்பூரும் முடங்கியுள்ளது. பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே அங்கே இரண்டு குக்கி இன பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே இது தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனையுடன் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
சீமான்: இந்தச் சம்பவம் குறித்து அவர் பேசுகையில், “குடியரசுத் தலைவர் யார்.. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினாலும் யாரிடம் நிர்வாகம் செல்லும் என்பது அனைவருக்கும் தெரியும்.. இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டது போலப் பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் அவை வெளியே தெரியக் கூடாது என்பதற்காகவே இணையச் சேவையை முடக்கியதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங்கே கூறுகிறார்.
அதாவது இதுபோன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்த அவர்கள் முயலவில்லை. மாறாக இது வெளியே தெரியாமல் இருக்கவே அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வலிமையான காவல் துறை உளவுத் துறையை வைத்திருக்கும் அரசு.. பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் நாடு அரை மணி நேரத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்தி இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வை எட்டியிருக்க முடியும்.
என்ன நடக்கிறது: ஆனால், இந்த கலவரம் நடக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே கலவரம் தொடர்கிறது. இதுபோன்ற காலத்தில் திடீரென காங்கிரஸ் திடீரென நல்லவர்கள் போலப் பேசுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதில் இருந்தே அங்கே பிரச்சினை இருக்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பெண்கள் நிர்வாணமாகப் போராட்டம் நடத்தியுள்ளனர்.. ஆனால் இப்போது திடீரென அவர்களுக்கு அக்கறை வந்துவிட்டது. ராகுலும் அக்கறை வந்தது போலப் பேசுகிறார்.. இதற்குக் காரணம் தேர்தல்.
அங்குள்ள மைத்தேயி இன மக்கள் பாஜக வாக்காளர்கள். குக்கி இன மக்கள் காங்கிரஸ் வாக்காளர்கள். அவர்கள் வாக்கு வராது என்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று பாஜக வேடிக்கை பார்க்கிறது. இதைச் சர்வாதிகார ஆட்சி என்று நம்மால் சொல்ல முடியாது.. ஏனென்றால் நேர்மையாளன் சர்வாதிகாரியாக இருப்பான். இது கொடுங்கோல் ஆட்சி. உலகில் இதுபோல எந்தவொரு நாட்டிலும் ஆட்சி நடந்திருக்காது.
![Violence in Manipur can be stopped in less than 10 seconds says NTK Chief Seeman Violence in Manipur can be stopped in less than 10 seconds says NTK Chief Seeman](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/screenshot13988-down-1690039077.jpg)
வெறும் 10 நொடி வேலை: இது 10 நொடி வேலை. வன்முறையை நிறுத்திவிடலாம்.. அதைவிட்டுவிட்டு மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த நாட்டின் குடிமக்களாக நாம் இருப்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். தலை குனிய வேண்டும். காஷ்மீரில் சிறுமியைப் பலாத்காரம் செய்து கொன்றார்கள்.. அவர்களை என்ன செய்தார்கள். பிறகு ஏன் பாரத மாதாவை மட்டும் வணங்குகிறார்கள்” என்று மிகவும் வேதனையுடன் பேசினார்.
மணிப்பூர் மாநிலத்தில் இரு பெண்களின் இப்படி நடத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வெளியான பின்னரே போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரைக் கைது செய்துள்ளனர்.