தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று கூடியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை என தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் இந்த கூட்டம் நடை பெறுகிறது.
இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்துவது, மகளிர் உரிமைத் தொகைக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் முதியோர் உதவித் தொகை மற்றும் ஆதரவற்றோருக்கான உதவித்தொகையை உயர்த்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மணிப்பூர் கலவரம் மற்றும் அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.