சியோல்,
வடகொரியா அவ்வப்போது அணு ஆயுத ஏவுகணைகளை விண்ணில் ஏவி பரிசோதனை செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், வடகொரியா இன்று மஞ்சள் கடல் பகுதியில் பல்வேறு ராக்கெட்டுகளை ஏவி பரிசோதனை செய்து உள்ளது. இதனை தென்கொரியா அறிவித்து உள்ளது.
இதுபற்றி தென்கொரியாவின் படைகளுக்கான தலைவர் வெளியிட்ட செய்தியில், எங்களுடைய ராணுவம் கண்காணிப்பு மற்றும் காவல் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அமெரிக்காவுடன் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொண்டும் வருகிறது. உறுதியான ஒரு தயார் நிலையையும் பராமரித்து வருகிறது என கூறியுள்ளார்.
தென்கொரியா மற்றும் அமெரிக்க உளவு பிரிவு அதிகாரிகள் வடகொரியாவின் இந்த ராக்கெட் பரிசோதனைகளை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பரிசோதனை அதிகாலை 4 மணியளவில் நடந்து உள்ளது.
இந்த ராக்கெட்டுகளின் வகை மற்றும் பிற விவரங்களை பற்றி அறிந்து கொள்வதற்காக ஆய்வு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
வடகொரியா, கிழக்கு கடல் பகுதியில் இரண்டு குறுகிய தொலைவு சென்று தாக்க கூடிய ராக்கெட்டுகளை ஏவி பரிசோதனை செய்த 3 நாட்களில் இந்த பரிசோதனை நடந்து உள்ளது.