ஸ்ரீவில்லிபுத்தூர்: வனவிலங்குகளை வேட்டையாடியவர் கைது – மிளா, காட்டுப்பன்றி இறைச்சிகள் பறிமுதல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் ரெங்கர்தீர்த்தம் பீட் பகுதியிலுள்ள பூவாணி கண்மாய்க்கு உணவுத்தேடி வரும் வனவிலங்குகளை மர்ம நபர்கள் சிலர் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வனச்சரக அலுவலர் கார்த்திக் உத்தரவின்பேரில் வனவர் மோகன்ராஜ் தலைமையில் வனக்காப்பாளர் ரஞ்சினி உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பூவாணிக்குளம் கண்மாயில் காட்டுப்பன்றி வேட்டையாடப்பட்டு தலை தனியே வெட்டப்பட்டு கிடந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின்படி, பூவாணியை சேர்ந்த மகேந்திரன் (வயது 32) என்பவரின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரின் வீட்டில் 2.5 கிலோ மிளா இறைச்சி மற்றும் 800 கிராம் காட்டுபன்றி இறைச்சி, இறைச்சி வெட்டும் கட்டை ஆகியவை‌ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மகேந்திரனை கைதுசெய்த வனத்துறையினர் அவருடன் மிளா வேட்டையில் ஈடுபட்ட சகோதரர் முத்துராஜ் என்பவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2ல் பொறுப்பு நீதிபதி திருநாவுக்கரசு முன்பு மகேந்திரன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றகாவலில் சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.