Project K: `Kalki 2898 AD' கமலின் போர்ஷன் எப்போது படமாகிறது? மேக்கப்பிற்கு மட்டும் இவ்வளவு மணிநேரமா?

இந்திய சினிமாவே எதிர்பார்த்திருக்கும் படம் ‘புராஜெக்ட் கே’ (Project K). படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி வரவேற்பை அள்ளிக் கொண்டிருக்கிறது. படத்திற்கு `கல்கி 2898 AD’ என டைட்டிலையும் அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் சான் டியாகோவில் நடைபெற்ற காமிக் கான் விழாவில் இதன் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகின.

படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் சாராம்சத்தை உள்ளடக்கிய முன்னோட்ட வீடியோ மக்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ‘விக்ரம்’ படத்திற்குப் பின், பான் இந்தியா கதைகள், மல்டி ஸ்டார் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் கமல். அதிலும் இப்போது தயாராகி வரும் ‘கல்கி’ நேரடி தெலுங்கு படம் என்பதாலும், பன்மொழிகளில் வெளியாகிறது என்பதாலும் இந்திய சினிமாவின் பல ஆளுமைகளும் படத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

கமல், பிரபாஸ், ராணா

அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானியுடன், நம்மூர் பசுபதியும் நடித்து வருகிறார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை என்பதாலும், 2898 ஆண்டில் நடக்கும் கதை என்பதாலும் ஹாலிவுட் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு மேக்கிங்கைச் செதுக்கி வருகிறார்கள். படப்பிடிப்பு அமெரிக்காவிலும், ஹைதராபாத்திலும் நடக்கவிருக்கிறது. இதற்காக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ஏற்ப, பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவும் அங்கேதான் படமாக்கப்பட்டது.

படத்தின் இயக்குநரான நாக் அஷ்வின், படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்னர், “கமல் சார் ஒரு லெஜெண்ட், இந்த கதாபாத்திரத்திற்கும் ஒரு லெஜெண்ட்தான் வேணும். உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்வதற்காகவும், காலம் தாண்டி நிற்கும் ஒன்றைச் செய்யவும் காத்திருக்கிறேன்” எனப் பெருமையுடன் சொல்லியிருக்கிறார். படத்தில் கமல்தான் மெயின் வில்லன் என்கிறார்கள். கமலின் போர்ஷன் செப்டம்பரில்தான் படமாகிறது. அவரது விசேஷ தோற்றத்தின் மேக்கப்பிற்கு மட்டுமே மூன்றரை மணிநேரம் செலவாகும். அந்த மேக்கப்பைக் கலைவதற்கும் அதே அளவு நேரமெடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.

கமல்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், ‘கல்கி 2898 AD’யைத் தயாரிக்கிறது.

“இது அறிவியல் புனைவு கதை. இதற்கும் முன் யாரும் செய்திராத மேக்கிங்கில் தயாராகிறது. ‘2898 AD’ன் எதிர்காலத்தில் அமைக்கப்பட்ட கதைக்கரு என்பதால் எதிர்காலக் கூறுகளை வளமான மேக்கிங்கில் எதிர்பார்க்கலாம். புதிய வரையறைகளுடன் இதை உருவாக்கி வருகிறோம். ஈடு இணையற்ற சினிமா அனுபவத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம்” என்கிறது தயாரிப்பு தரப்பு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.