தஞ்சாவூரில் கடந்த 2019-ம் ஆண்டு பா.ம.க முன்னாள் நகரச் செயலாளர் திருப்புவனம் ராமலிங்கம் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு பின்னணியில் மதமாற்றம்ரீதியான பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாகவும், இந்தக் கொலையில் எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாகவும் என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது. அதனால், இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், திருச்சி, தஞ்சாவூர், நெல்லை உட்பட 9 மாவட்டங்களில், சுமார் 24 இடங்களில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக எஸ்.டி.பி.ஐ கட்சின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனைக்குப் பிறகு நெல்லை முபாரக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “எனது வீட்டில் இன்று அதிகாலையிலிருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவதால், தேசிய புலனாய்வு முகமையை முன்னிறுத்தி எங்களுக்கு எதிராக மத்திய அரசு அரசியல் செய்கிறது. இதன் மூலம் அடுத்த ஆட்சிக்கு குறிவைக்கிறது பா.ஜ.க. எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு துளியும் சம்பந்தமில்லாத இந்த வழக்கை சட்டபூர்வமாக எதிர்கொள்வோம். இது போன்ற பொய் வழக்குகள், பொய் சோதனைகள் மூலம் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க நினைத்தால், அதற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி மக்களை திரட்டி போராடும்.
எனது வீட்டில் காலையிலிருந்து சோதனை செய்து, அந்த வழக்கு தொடர்பாக எந்த ஆதாரத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஊடகங்களுக்கு செய்தியை பரவவிட்டு, காழ்ப்புணர்வோடு, என்னுடைய செல்போனை மட்டும் கைப்பற்றியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கு அமலாக்கத்துறை போன்று, முஸ்லிம் அமைப்புகளுக்கு என்.ஐ.ஏ. எனவே, மக்கள் விரோத பாரதிய ஜனதா அரசினுடைய நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் நாங்கள் அம்பலப்படுத்துகிறோம். மக்களுக்காக எங்களது போராட்டம் எப்போதும் தொடர்ந்து நடக்கும்” என்றார்.