நெல்லை:
நீதிமன்ற வளாகங்களில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் புகைப்படங்களை அப்புறப்படுத்தும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.
கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை இன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், “அனைத்து நீதிமன்றங்களிலும் தேசத்தந்ததை மகாத்மா காந்தி, தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் உருவச்சிலைகளே இடம்பெற வேண்டும். இவர்களை தவிர, மற்ற யாருடைய புகைப்படங்களோ, உருவச்சிலைகளோ இடம்பெறக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, அம்பேத்கரின் புகைப்படங்களை அகற்றுவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பல அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளனர். இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோரின் உருவச்சிலை அல்லது உருவப்படங்கள் மட்டுமே இடம்பெறலாம். அவர்களை தவிர வேறு யாருடைய சிலைகளோ, புகைப்படங்களோ இடம்பெறக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தியடிகள், இந்த தேசத்தை உருவாக்குவதற்கு எப்படி காரணக்கர்த்தாவாக விளங்கினாரோ, அதே போல புதிய இந்தியாவை கட்டமைப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தை அல்லும் பகலும் உழைத்து வகுத்தளித்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் என்ற முறையில் நீதிமன்றங்களில் அவரது திருவுருவப்படம் இருப்பது என்பது மிகவும் பொருத்தமானது ஆகும்.
இதுபோன்ற சூழலில், அம்பேத்கரின் புகைப்படங்களையும், சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் உயர் நீதிமன்றம் இத்தகைய சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.