புதுச்சேரி: புதுவை அரசில் காலியாக உள்ள 116 மேல்நிலை எழுத்தர் பணிக்கு இன்று தேர்வு நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு மையத்தில் சிலருக்கான தேர்வு அறை முதல்தளத்தில் இருந்ததால், மாற்றுத் திறனாளிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
புதுவை மாநில அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள 116 மேல்நிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. தேர்வுக்காக புதுவையில் 107, காரைக்காலில் 13, மாஹேயில் 5 மற்றும் ஏனாமில் 8 என மொத்தம் 133 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு பணியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தேர்வு அலுவலர்கள் நுழைவு சீட்டுடன் தேர்வர்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு ஆகியவற்றுள் ஒன்றின் அசலை கேட்டுப் பெற்று உறுதி செய்தனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.
தேர்வு தொடங்கியவுடன் மையத்தின் நுழைவு வாயில் மூடப்பட்டது. அதற்குப் பின் காலதாமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 12 மணிக்கு தேர்வு முடிந்தது. விண்ணப்பித்த 46,001 பேரில் 38,067 பேர் தேர்வு எழுதினர். இதன் சதவீதம் 82,75. தேர்வு நேர்மையாக நடத்தப்பட்டு மெரிட் அடிப்படையிலேயே பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனி மையம்: மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கென புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விவேகானந்தா பள்ளியில் தனி மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வதற்கு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், போலீஸாரும் அவர்களுக்கு உதவி செய்தனர். கண்பார்வையற்ற மற்றும் தேர்வு எழுத முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத உதவும் வகையில் 40 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
37 தேர்வர்கள் அலுவலர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர். எனினும், நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் சிலருக்கு முதல் மாடியில் தேர்வு எழுதும் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் படிக்கட்டு ஏறி செல்ல அவர்கள் சிரமப்பட்டனர். சிலர் தன்னம்பிக்கையுடன் தாங்களாக மேலே ஏறிச் சென்றனர். வரும் காலங்களில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தரைத்தளத்திலேயே தேர்வு அறை ஒதுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.