மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளுக்கு இடையே மீண்டும் சலசலப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் 2019 மக்களவைத் தேர்தலில் ஒதுக்கிய எண்ணிக்கையிலேயே மீண்டும் ஒதுக்க அதிமுக முடிவெடுத்துள்ள நிலையில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கிறது பாஜக. குறைந்த பட்சம் 9 தொகுதிகளாவது வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
பாஜக வைக்கும் நிபந்தனை!தொகுதிகளின் எண்ணிக்கை ஒரு பக்கம் என்றால், எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் சிக்கல் தான். கொங்கு மண்டலத்தில் நான்கு தொகுதிகளை பாஜக குறிவைக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் தென்சென்னை, கன்னியாகுமரி, வேலூர், சிவகங்கை என சில தொகுதிகளில் தேர்தல் பணிகளையே தொடங்கி விட்டதாக சொல்கிறார்கள். அண்ணாமலைக்கு கோவை தொகுதியும், எல்.முருகனுக்கு நீலகிரி தொகுதியும் வேண்டும் என்பது அவர்கள் நிபந்தனையாக இருக்கிறது.
கமல்ஹாசன் கோவையில் போட்டி?இது ஒருபுறமிருக்க மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோவையில் வீடு வீடாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டுப் பெற்று வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் கோவை தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று தகவல்கள் வெளிவரும் நிலையில் மநீம களத்தில் இறங்கியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் இரண்டிலும் மநீம கோவையில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது.
அண்ணாமலையை வெல்ல முடியுமா?கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது அதிமுக கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்ட வானதி சீனிவாசனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் களமிறங்குவது தொடர்பாக பாஜக வட்டாரத்தில் பேசினோம். “சட்டமன்றத் தேர்தலில் கோவையில் வெற்றி பெறமுடியாத கமல்ஹாசன், எங்கள் தலைவர் அண்ணாமலையை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவார்?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.
வானதியிடம் பறிபோன வெற்றி!அரசியல் விமர்சகர்களிடம் இது தொடர்பாக பேசினோம். கமல்ஹாசன் மக்களவைத் தேர்தல் தொடர்பாக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அவர் விரைவில் இந்தியா கூட்டணியில் இணையக்கூடும். சட்டமன்றத்தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் 51, 481 வாக்குகள் பெற்றார். வானதிக்கும் அவருக்கும் 1728 வாக்குகளே வித்தியாசம்.
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
அந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மயூரா ஜெயக்குமார் 42,383 வாக்குகள் பெற்றார். தற்போது மநீம திமுக கூட்டணியில் இணையும் சூழல் நிலவுகிறது. அவ்வாறு இணைப்பு சாத்தியமானால் கமல்ஹாசன் அங்கு நிறுத்தப்பட்டால் கமல்ஹாசன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள்.